Wednesday, December 09, 2009

கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடுடிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு 'அகநாழிகை' பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளில் என் கவிதைத் தொகுப்பும் வெளிவர உள்ளது, தலைப்பு 'கூர்தலறம்.' இந்த தொகுப்பு எனக்கு ஒரு சுவையான ஆச்சர்யம். இந்த தொகுப்பை வெளியிட உதவிய தோழி லாவண்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'அக‌நாழிகை' பொன்.வாசுதேவ‌ன் அவர்களின் கவிதைகளின் வாசகன் நான், அவரின் 'அக‌நாழிகை' மூலம் இந்த தொகுப்பு பிரசுரமாவதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி, அவருக்கு என் நன்றிகள் கோடி. என் கவிதைகளை திருத்தி, செதுக்க உதவிய தோழி ஸ்ரீமதிக்கும், நண்பன் பிரதீப் குமாருக்கும், ஏனைய வலை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்:
கவிதைகள்:
1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)
2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)
3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)
4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

சிறுகதைகள்:
1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

கட்டுரைகள்:
1. பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)


புத்தக வெளியீட்டு விழா:நாள்: டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இட‌ம்: டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை, 
கே.கே.நகர் (மேற்கு) (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேம். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும். மேற் குறிப்பிட்ட புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். நேரடியாக வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் aganazhigai@gmail.com.

அனைவரும் வருக !

Monday, November 16, 2009

புதியன புகுதலும்...


குப்பையில் கிடத்திய
கிழித்த நாட்களின்
தவணை நினைவுகளை
அவள் நிரம்பிய சவப்பெட்டியில்
திணித்து
புதைக்கவைத்தது
நேற்று சந்தித்தவளின்
ஈஸ்ட்ரோஜன் வழியும் நளினம்.
ஒற்றைப் பார்வையில்
ஒளிபரப்பிக்கொண்ட
சம்மதங்கள் தாண்டி
பற்றியெறித்தது ஆதிக்கனல்.
சாம்பலாகையில்
எப்படியெனத் தெரியாமல்
நெருக்கமாகிவிட்டாள்
முன்னவளை விட
ஒரு சதமேனும்!


Photo courtesy:  zycu.com
-

Thursday, November 05, 2009

Waning gibbous


Waning gibbous, originally uploaded by Gandhi Theerthagiri.
Canon 400D, 55-250mm@250, 1/10s, f/20, ISO100
On black

-

Sunday, October 25, 2009

முன்பனி இலைகள்


Uploaded by Gandhi Theerthagiri through Flickr.
Canon 400D, 18-55mm@49, 1/60s, f/5.6, ISO200
View larger on white background.

-

Tuesday, September 08, 2009

சொல்ல மறந்தவை


நீ வீசியெறிந்த மெளனத்தில்
அலை தளும்பி நிற்க்கிறதென் குளம்
கரையொதுங்கும் சில குமிழிகளுக்கு மட்டும்
சொல்லிவைப்பேன்
உன்னிடம் சொல்ல மறந்தவைகளை.
ஆகாயம் வீசும்
பேய்க்காற்றில்
அவை உடைவதற்க்குள்
ஒரே ஒரு முறையேனும்
என் குளத்தில்
கால் நனைத்து செல்.Photo courtesy: free-background-wallpaper.com
-

Sunday, September 06, 2009

தியாகத்தின் அறிவியல்சார்ல்ஸ் டார்வின்
(1809-1882) தன் The Origin of Species-ல் 'தக்கன பிழைக்கும்' அதாவது உயிரினங்கள் வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொள்கின்றன, அதில் தகுதியானவையே வாழும் என அறிவித்தார். இந்த கட்டுரை அதைப்பற்றியல்ல. அவர் விவரிக்கத் தடுமாறிய தியாகத்தை (sacrifice)-ப் பற்றியது. அதாவது, தக்கன பிழைக்குமென்றால் ஒரு உயிர் மற்றோன்றிற்க்கு ஏன் உதவவேண்டும்?, ஒத்துழைக்கவேண்டும்? அல்லது தியாகம் செய்ய வேண்டும்? டார்வினால் விவரிக்க மிகவும் தடிமாறிய விசயம்தான் இந்த ’தியாகம்.’


வேலைகாரத் தேனி அதன் கூட்டத்தின் நன்மைக்காக கடினமாக உழைக்கக்கூடியது ஆனால் அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, பிறகேன் யாருக்காகவோ இப்படி உழைக்க வேண்டும்? இவ்வகை உயிரிகளை (social organisms) தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையெனவும் தன் கோட்பாட்டால் இவைகளை விவரிக்க முடியாதெனவும் டார்வின் தன் The Origin of Species-ல் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட தியாகங்களால் தான் பரிணாமத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கின்றது. அந்த தேனியைப் போலவே, ஒரு வகை வேலைகார எறும்பாலும் இனப்பெருக்கமுடியாது ஆனால் அது அதன் ராணியின் குழந்தைகளை பேணி வளர்க்கும். இந்த மூன்று பில்லியன் வருடங்களில் ஒரு செல் உயிரியிலிருந்து ஆறு அறிவு மனிதனாக மாற இயற்கைத் தேர்வும் (Natural selection), மரபணுப்பிறழ்வும் (Mutation) மட்டுமே காரணமாக இருக்க முடியாதெனவும் இதுபோன்ற தியாகங்களும் மிக முக்கியமென சொல்கிறார் மார்டின் நெளக் (Harvard University, USA). நீங்கள் Discovery, NGC, AP-ல் பார்க்கும் உயிரைப் பணையம் வைத்து தன் குட்டியைக் காப்பாற்றும் மானும், சின்னம்மையில் நீங்கள் படுத்தால் மாரியம்மனுக்கு விரதமிருக்கும் உங்கள் அம்மாவும் தியாக உருவாக மாறி உங்களை காப்பாற்ற முயலும் குடும்ப பந்தங்களாலும், பிறர்க்காக விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலமாகவும் ஒரு இனத்தின் வளர்ச்சி ஓங்கும்மென்றும் இது போன்ற குடும்பங்களை Natural selection விரும்புமென்றும் டார்வின் சொல்லியிருக்கிறார்.


டார்வின் கொடுத்த இந்த துப்பை வைத்துக்கொண்டு வில்லியம் ஹேமில்டன் (1936-2000) என்னும் இங்கிலாந்தைச் சார்ந்த பரிணாம ஆராய்ச்சியாளர் ’தியாக’ங்களை Inclusive fitness எனும் சமன்பாட்டில் கொண்டுவந்து டார்வினின் எதிர்கொண்ட பிரச்சினைக்கு விடை கொடுத்தார். அதாவது, உங்கள் உறவுக்காரர்கள் உங்களையொத்த குணமுள்ளவர்கள் (எதோ ஒரு வகையிலாவது – நல்லதோ/கெட்டதோ) அந்த குணமே உங்கள் குடும்பத்தில் மேலோங்கியிருக்கும். அதனால் ஒரு குடும்பத்தில் ’தியாகி’கள் சில இருந்து தானழிந்து தன் குடும்பத்தை வாழையடி வாழையாக பெருகுவர். குடும்ப உறுப்பினர்கள் பெருகுவார்கள், அந்த குடும்பம் பெருகுகிறது. இந்த குடும்பம்போல் தான் ஒவ்வொரு உயிரிக்கும். எடுத்துக்காட்டிற்க்கு, ஒரு வகையான அணில் தன்னை இரையாக்கவரும் விலங்கைப் பார்த்ததும் கத்தி தன் சக அணில்களைக் எச்சரிக்கும், அதன் சப்தத்தில் அந்த விலங்கிடம் தான் சிக்கிக்கொள்ளும் – இந்த ’தியாக’ அணில் இரையாகக்கூடும் ஆனால் மற்ற அணில்கள் காப்பாற்றப்படும், இப்படி சில தியாகிகள் இறந்தாலும் அந்த குழுமத்திற்க்கு கடைசியில் நன்மையே. மாறாக, அந்த அணில் தான் மட்டும் தப்பி இருந்தால் அந்த குழு சில அணில்களை இழந்திருக்கும். இப்படி அந்த குழு எண்ணிக்கை குறைந்துகொண்டே போயிருக்கும். ஒரு உயிரின்/குழுவின்/குடும்பத்தின் பரிணாம வெற்றி அதன் நகல்களின் எண்ணிக்கையில்தான் உள்ளது அதனால் உதவி/தியாகத்தினால் ஒரு உயிரின்/குழுவின்/குடும்பத்திற்கோ எந்த கெடுதலும் எற்படாது மாறாக நன்மையே ஏற்படும். 


மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒரு குழுவிற்கோ, இனத்திற்கோ, உயிரிற்கோ பொது. இப்படியான sacrifice, cooperation, altruism போன்ற குணங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிரி தன் பரிணாம வெற்றிக்காக அந்தந்த உயிரினங்களில் இயற்க்கை ஏற்ப்படுத்தியுள்ளது என்பதைத் தாண்டி நம்மால் அவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.


டிஸ்கி:
நீ கவிதையெழுதினா யாருக்கும் ஒரு பைசா பிரயோஜனமில்ல, உருப்படியா எதுனா எழுதுனா தேவலாமென்று சொன்ன நண்பர்களுக்காக. இது உபயோகமானதான்னு தெரியல, ஆனா இந்த வருடம் டார்வினின் 200-வது பிறந்த வருடம் மற்றும் அவர் எழுதிய The Origin of Species-ன் 150-வது ஆண்டு விழாங்கறதுனால இது.


References:
1. Darwin, C. R. 1859. On the origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life. London.
2. Science (2009) Vol. 325. no. 5945, pp. 1196 – 1199.
3. Dawkins, R. 1976. The Selfish Gene. Oxford. London
4. http://en.wikipedia.org/wiki/Inclusive_fitness

Photo courtesy: sciencemag.org

-

Wednesday, September 02, 2009

சிலுவை

என் போலவே
சிதறியிருந்த கூட்டத்தில்
அவள்மட்டும்
எனை
உருக்கிடும் ரசாயனங்களை 
செய்து கொண்டிருந்தாள்.
கரைந்துகொண்டிருந்தேன்.
கடற்கரையில்
நாற்பது டிகிரி வடக்கில்
தனியாய்
அமர்ந்த அவளுக்கு
கண்மூடி ஜீவரகசிய
முத்தமிட்டேன்.
இதழ் பிரிக்கையில்
நூல் அறுந்து
ஒட்டிகொண்ட
எச்சில் குமிழிகளில்
தொடங்கி 
கொட்டிய நீரைப்போல்
படர்ந்து
நிரம்பிவழிந்து கொண்டிருந்தாள்.
சிவந்த கண்களுடன்
மொழியின் வசமற்று
வாய் பிளந்து...
கண் திறக்கும் 
பொழுதிற்க்குள்
என் காலடியில்
எனக்கான சிலுவை
முளைத்துக்கொண்டிருந்தது...

Photo courtesy: tbclink.org
-

Monday, August 31, 2009

கலவை

இத்தனை நாட்களில்
எதுவாகவும்
ஆகமுடியவில்லை
நல்லவனாகவோ,
கெட்டவனாகவோ.
முழுதும்
உண்மையானவனாகவோ,
ஏமாற்றுபவனாகவோ.
எல்லோரிடமும்
காண்பிக்கவும்

ஒளித்து வைக்கவும்
அவரவர்களுக்கான
சிற்சிலவற்றை வைத்துள்ளேன்.
தனிமையில்
எதாவது ஒரு நேரத்தில்
இப்படி கலவையாகவோ
அல்லது
கலவையின் கலவையாகவோ
உணரும்போது
என் கண்ணாடி பிம்பங்களில்
அழுக்கின் கனம் மட்டும் கூடியிருக்கிறது.
இப்போது,
இந்த மூலையில்
வன்மையான கசப்புடன்
என்னை தேற்றிக்கொள்ள வைப்பவை
அவரவர்க்கான
அழுக்கு தோய்ந்த
அவரவர் பிம்பங்கள் மட்டுமே.


Fyodor Dostoyevsky (1821-1881)க்கு...

Picture courtesy: chuckypita.com

-

Wednesday, August 26, 2009

நாவினாற் சுட்ட வடு

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.

Photo courtesy Imapix.
-

Monday, August 24, 2009

நகரமுனி

சலித்த விட்டுக்கொடுத்தல்கள்,
புறக்கணிப்பு காயங்கள்,
கொல்லப்பட்ட காதல்,
மறுக்கப்பட்ட அன்பு,
நம்பிக்கையிழப்புகள்,
அவமானங்கள்,
அறுந்த உறவுகளென
தேர்ந்தெடுத்த கூரிய காயங்களை
எதிர்படும்
காலங்களில்
தடயங்களின்றி அழிக்கப்படவேண்டி

நாட்குறிப்பின் கிழிந்த இடங்களில்
தோண்டியிருக்கிறேன்
அதனதன் சவக்குழிகளை
அந்த அடர் இருட்டு பக்கங்களில்,
அவர்களுக்கான
அன்பு பூசிய
சொற்களுக்கு
அன்றன்று பூத்த
பாரிஜாத பூக்களையும்
சொருகியிருக்கிறேன்.
கனத்த பெருமழை வெறும்
பேரிரைச்சலுடன் பேய் மழையாகும்
செய்ய ஏதுமற்ற
நரைத்த நேரத்தில்
காய்ந்த
பாரிஜாத பூக்கள் தோய்ந்த
கிழித்தபோது ஒட்டிக்கொண்ட
ஒவ்வொரு பக்கங்களிலும்

படுத்துறங்கி
அவ் ஒவ்வொருவர் மீதும்
தனித்தனியாய்
பற்றில்லாமல்
காதலில்லாமல்
காழ்ப்பில்லாமல்
துக்கமில்லாமல்
வன்மமில்லாமல்
சிரிப்பில்லாமல்

விடியும் என் பொழுதுகள்.

Photo by Grafter.
-

Thursday, August 20, 2009

ஆதாம் பறித்த ஆப்பிள்

விழித்ததும்
பிரிந்ததுணரும் முன்னர்
உனை அழைக்க அழுத்தப்பட்டது தொடங்கி
முதல் ரிங்கிற்க்கு முந்தைய
மில்லி நொடியில்
எனை கவ்வ
காத்திருக்கிறது
ஒரு விலங்கு.
பேசும் முன் துண்டிக்கவைத்து
நிரம்பிவழியவிடும்
என் வெற்றிடங்களை.
விடுபடலோ
விடுதலையோ
சாத்தியமில்லை
அதனிடம்.
தெரிந்தே உன் எண்ணை
அழுத்தியவொரு
மதிய வேளையில்
பழகிய தாமதத்துடன் வந்து
உயிர் கத்தியழுது கதறியும்
என் தலை கவ்வி
துளித்துளியாய்
ரத்தம் சொட்ட
எல்லோருக்கும் பரிமாறும்
எல்லோரும் விரும்பியபடியே
நானில்லாத
அவர்களுக்கான என்னை.

-

Thursday, August 13, 2009

Cheers

Click on the photo for better resolution

Canon D400, EFS18-55mm@30, 1/500s, f5.6, ISO100.

-

Wednesday, August 12, 2009

Achilles’ heel

நீயற்ற வாழ்வின் சமன்பாடுகளின்
விடைகளுக்காக
நெடுநாள் காத்திராமல்
இறந்துவிட்ட அன்பின்
இறுதிச்சடங்கில்
துக்கமோ
விரக்தியோ
அல்லது
எதுவெனத்தெரியாதவொன்றால்
விம்மி பின்
உடைந்து அழுது
புதைத்து திரும்பும் வழியில்
உனை
தொலைக்கவும்,
சுமக்கவுமியலாமல்
கூனல் விழுந்து
உன் கைக்குள்
சுருங்கிக்கொள்கிறேன்.

உனையும் புதைத்துவிட்டு வருவதாய்
சொல்லிவந்த
என் வீட்டு
கண்ணாடியிடம்
என்ன சொல்ல?

-

Monday, August 10, 2009

முடிவற்றவை

சிக்குண்டு கிடக்குமொரு
வெண்மதியப் பொழுதில்
மூடிய ஜன்னலிடுக்கில்
பீறிட்டெழும் ஒளிக்கீற்றில்
மிதந்து செல்லும்
தூசியின் நோக்கமுடையது
என் மனமெனும் பிராணி.
வெளியேற வழியற்ற
ஒளிதாண்டிய
ஓரிடத்தில்
இந்த கவிதையை போலவே
முடிவற்றிருக்கும்...

-

Friday, August 07, 2009

தேவகணம்

 • உனை பிரியும் நேற்றே
  துவங்கிவிட்ட
  இன்றய அஸ்தமனத்தில்
  ஒருசில கண்ணீரே
  வைத்துள்ளேன்.
  எனக்காகயிருக்கட்டுமவை!

 • நுகர்ந்ததும்
  உணவில்லை
  என்றுணர்ந்த எதோவொரு
  ஐந்தறிவு போல்
  அலைக்கழிக்கப்படுகிறது
  என் வாழ்வு.
  நுகர்ந்த மூச்சில்
  ஆடிக்கொண்டிருக்கிறாய் நீ.
  யௌவன பொழுது
  நிறைந்த கோப்பைக்குள்
  வழிந்து நிறைகிற
  உன் நினைவுகள்
  தொலைந்த தேவகணத்தில்
  என்னுள்
  நுழைந்துகொள்ளும்
  அருகிலிருந்து எனைப்
  பார்த்துக்கொண்டிருக்கும்
  நான்.
-

Monday, August 03, 2009

காற்றில்லா நாள்

நாட்களின் வசீகரங்கள் தொலைந்த
கடும்நெடி வீசும்
ஒரு பழுப்புநிற மாலையில்
சிமென்ட் பெஞ்சில்
சந்திக்கநேர்ந்தது
விழிமணியில் ரத்தம் தோய்ந்த
என்றோ சந்தித்த அவளை.

சில சில்லுகளே மீதமிருந்த
அவள் இதயத்தை ஒட்டவைக்க
பிரியங்கள் பூசிய
என் மென்சொற்களுக்காக
இளஞ்சூட்டு கண்ணீரை
என் தோளில் கொட்டினாள்.
கொஞ்சம் விசும்பல்கள் தாண்டி
காற்றற்ற மரமாய்
அமைதியாயிருந்தவள்
மெல்லிய புன்னகையோடு
தேங்க்ஸ் சொல்லி மறைந்தாள்.


உறங்கையில்
அத்தனை கடுமையில்லாத
வெறும் காற்றில்லா நாளாகிப்போனது
அன்றைய தினம்
.

-

Wednesday, July 29, 2009

ஏழு கால் சிலந்தி

பெண்மையின் மென் ஸ்பரிசங்களின் மீது
என்றோ விழுந்த நீள் உறக்கத்தில்
திருடுபோகிறேன்.
புயல் கடந்த இடமாகிப்போனவொரு இடத்தில்
உடைத்தெறிய முடியாத பொழுதில்
அவளுள் நுழைந்து தாழிடும்
இரக்கமற்ற மௌனங்களில்
வாழ்தலின் கனம்
பிடுங்கித்தின்னும
என் ஒற்றைக்கண் பூனை
வெறுமை மிகு பாதாளங்களில்
ரத்தம் வழிய இறந்துகிடக்கிறது.

மேகமூட்ட வானின் விளிம்பு தாண்டிய நீர்
உச்சந்தலை நனைக்கையில்
உலகின் சூட்சுமங்களில் ஒன்றை அறிகிறேன்.
திரும்பத் தீண்டக்கூடும் ஸ்பரிசத்தை
காதலிக்கக்கூடும்.
அதுவரை,
களவு போனவைகள்
தொலைந்தவைகளாகக்கூடும்
இதயமும் சேர்த்து...

-

Thursday, May 21, 2009

போதி மரம்

பாசி பருகிக்கொண்டிருக்கும்
குளமொன்றின் முனகல்
கேட்டவொரு
ஞாயிறு பிற்பகல் கனவில்
புத்தர் தோன்றினார்.
அவர் கண்ட
நான்கு உண்மைகளை
தேஜஸ் வழிய
பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்,
லேசாகிக்கொண்டிருந்தது மனது...
அவர் போதிமரத்தடியில் இல்லை
எங்கு தேடியும்
போதி மரத்தை காணவேயில்லை,
அது புத்தராய் இருக்காதேன்று
எழுந்து 
சோம்பல் முறித்துக்கொண்டேன்.

-

Wednesday, April 29, 2009

போராளியின் குறிப்பு


துர்நாறும் இந்த பொழுதில்
குறித்துக்கொள்கிறேன்
நீங்கள் எங்களுக்கு செய்தவற்றை
அதில் எழுதாத மைதீட்டிய பக்கங்களும்
குறிப்புகளே
.

வலிமை மட்டுமே பிரதானமான பின்
நீங்கள் இளைப்பாறும் கணத்தில்
எங்கள் பிள்ளைகளுக்கு
இந்த குறிப்புகளோடு கற்பிப்போம்
கொலை, வன்புணர்ச்சி
இன்னபிற வலியனவைகள்.

ஒரு மயிர்கூச்செறியும் கணத்தில்
பெருகும் எங்கள் வெளிச்சம்
வழிகாட்டுதலின்பாற்பட்டதல்ல.
அப்போது
வெற்றிக்கான எங்கள் குறியீடாய்
நீங்கள் எங்களுக்குச் செய்தவைகளோ
அல்லது
ரணப்பொழுதில் நாங்கள் யோசித்தவைகளோ...

அதுவரை
மாதானமென்பது
அகராதியில்
'' வரிசையில் வருமொரு
சொல் மட்டுமே.


Tuesday, April 28, 2009

இடுக்கண் கலைவதாம்...


எல்லாவற்றின் நடுவிலும்
அவனுக்கேற்பட்ட
விபத்தே அரைநாளாய்
கவனம் கலைத்தது.
அவசரமாய் கிளம்பி
பார்த்துவிட்டு வருகிறேன்.
வெள்ளை பேண்டேஜுடன் தடித்திருந்தது
அவன் வலக்கை,
நெற்றியில் நான்கு தையல்.
ஒன்றும் பெரியதாய் ஆகிவிடவில்லை!
கொஞ்சம் நிம்மதி.
உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு
வருந்திவிட்டு
ஒரு வாய் காப்பி குடித்து
டிஞ்சர் வாசத்துடன் வந்துவிட்டேன்.

இப்போதெல்லாம்
அடிக்கடி கனவு காட்டிக்கொண்டிருக்கிறது
அவனையும்,
கைமாத்தாய் வாங்கிய
முன்னுற்றி சொச்சம் ரூபாயையும்,
அவன் சொல்லவேண்டிய
ஒரு
தேங்க்ஸையும்.


-

Sunday, April 19, 2009

என்.ஆர்.ஐ பொழுதுகள்


சுப்ரபாத விழிப்பு
வளையமுடிந்த யோகா
ஃபில்டர் காபியுடன்
ஓரம் மடங்காத தினமணி
ஹமாம் சோப்புக்குளியல்
அரைமணி தியானம்
இட்லியுடன் தேங்காய் சட்னி
அலுவலக அவசரத்தில் அவள் முத்தம்
சிக்னல் விழாத சாலைகள்
சிதறவிரும்பாத வேலை
மாவடு ஊறிய தயிர்சாதம்
தாஜ்மஹால் டீயுடன்
புகைபிடிக்காத நண்பர்கள்
ஆறுமணி வீடு திரும்பல்
டீவி இல்லாத மாலை
ரசிக்கவொரு கவிதைப்புத்தகம்
என்னுடன் ரசிக்கும் அவள்
இருவரும் சமைத்த
எண்ணையில்லாத உணவு
லேசாய் குளிரும் மொட்டைமாடியிரவு
அவளின் முப்பத்தியேழு டிகிரி வெப்பம்
பேச சிலவிஷயங்கள்
சூடான பசும்பால்
சலிக்காத சிருங்காரம்
மார்மேல் அவள்கை
கனவில்லாத உறக்கம்.

மாறிக்கொண்டிருக்கும்
என் நிலங்களில்
டெட்லைன் வேலையின்பின்
பாஸ்தாவுடன் கொஞ்சம்
மெர்லாட் ஒயின் குடித்துத் திரும்பும் வழியில்
ஸ்டார் பக்ஸ் எஸ்ப்ரசோவிற்கப்பறம்
காலையில் க்ளையண்ட் மீட்டிங்கையும் சேர்த்து
இவையோசித்து
விழித்து கிடக்கிறேன்.

Wednesday, March 11, 2009

ஓசையடங்கிய மனம்

ஒரு நேர்கோட்டிலோ
எந்தவொரு புள்ளியிலுமோ
கிட்டத்தட்ட
வசப்படாத சூரியனின் முதல் கீற்றைப்போல
வட்டத்தின் அத்தனை மூலைகளிலும்
ஒருநொடிக்குள் தெறித்தோடி
மலையுச்சியில் குளிர் கூசி நிற்கும்
கோணிய என் மனதிற்கு
இப்போதைய
புருவமத்தியிலோ
பினியல் சுரப்பியிலோ
என்றோவொரு வயோதிக
மழைகாலங்களிளோ
பறைகிழித்துக்கேட்கும் அழுகுரலிலோ
அதைத்தாண்டி தூவப்படும்
ரோஜாவோ
செண்டுமல்லி வாசனையிலோ
அல்லது
தீயின் பிரதேசத்திலோ
எப்படியோ
என்றாவது சாத்தியப்படட்டும்
மூன்றாம் தந்திரத்தில்
திருமூலனருளிய
ஓசையடங்கிய மனம்.


Sunday, March 08, 2009

நீயெனும் மௌனம்விட்டுச்சென்ற
மௌனங்களில்
சகிக்கமுடியாத
நீயாகிறாய்
நீ


கனத்த உன் மெளனங்களை
சுமந்து செல்கையில்
நீயில்லாத வலியும் சேர்த்து
வலிகள்
எல்லை கடந்தவொரு பொழுதில்
தவறி
என்
வீடுமுன் தேங்கி நிற்கும்
மழை நிரப்பிய
பழுப்புநீரில்
வீழ்கையில்
சிறுவயதுமுதல்
கனவில் வரைந்து
முடிக்கயியலாத
பறவையொன்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.
எதோவொரு
இதய அறையில்
என் தெய்வங்களிடம்
உனை மறக்காமலிருக்க வேண்டியது மட்டும்
அறும் கடைசி நூலாய்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது.


Tuesday, February 24, 2009

சொற்கொலை
நம் பிரிவின்முன் ரயிலேறியபோது
நீ சொன்ன சொற்கள்
என் எல்லா ரயிலுக்கான காத்திருப்பிலும்
பிளாட்பாரமெங்கும் சிதறிக்கிடக்கும்.
ரணம்கூட்டும் சொற்கள்மட்டும் பொறுக்கியெடுத்து
தண்டவாளத்தில் கொலைசெய்யவைப்பேன்.
ரயிலேற்றி கொலைசெய்யப்பட்டபின்னும்
பயணம்முழுவதும் இம்சித்துக்கொண்டிருக்கும்
மரண ஓலமாய்
உன் நினைவுகளோடு...


Sunday, February 15, 2009

ஒரு வேளை


நமக்கான பாலடயாளங்கள்
மறைத்தொழித்து
உன்னுடன் ஒத்ததிர்ந்து துடிக்கிற
இதயமாகவேயிருக்க
இன்றும்விரும்புகிறேன்.

எப்போதாவது
நீ துடித்தெழுந்துணரும்
நொடிப்பொழுதில்
உன் எல்லைதாண்டி
எவ்வளவுதூரம்
சென்றிருப்பேனென்று
நிச்சயமாய்த் தெரியவில்லை...
கூப்பிடும் தூரத்தில் தென்பட்டால்
கூப்பிட்டுப்பார்
ஒரு வேளை
நான் திரும்பலாம்.