Sunday, September 06, 2009

தியாகத்தின் அறிவியல்



சார்ல்ஸ் டார்வின்
(1809-1882) தன் The Origin of Species-ல் 'தக்கன பிழைக்கும்' அதாவது உயிரினங்கள் வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொள்கின்றன, அதில் தகுதியானவையே வாழும் என அறிவித்தார். இந்த கட்டுரை அதைப்பற்றியல்ல. அவர் விவரிக்கத் தடுமாறிய தியாகத்தை (sacrifice)-ப் பற்றியது. அதாவது, தக்கன பிழைக்குமென்றால் ஒரு உயிர் மற்றோன்றிற்க்கு ஏன் உதவவேண்டும்?, ஒத்துழைக்கவேண்டும்? அல்லது தியாகம் செய்ய வேண்டும்? டார்வினால் விவரிக்க மிகவும் தடிமாறிய விசயம்தான் இந்த ’தியாகம்.’


வேலைகாரத் தேனி அதன் கூட்டத்தின் நன்மைக்காக கடினமாக உழைக்கக்கூடியது ஆனால் அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, பிறகேன் யாருக்காகவோ இப்படி உழைக்க வேண்டும்? இவ்வகை உயிரிகளை (social organisms) தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையெனவும் தன் கோட்பாட்டால் இவைகளை விவரிக்க முடியாதெனவும் டார்வின் தன் The Origin of Species-ல் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட தியாகங்களால் தான் பரிணாமத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கின்றது. அந்த தேனியைப் போலவே, ஒரு வகை வேலைகார எறும்பாலும் இனப்பெருக்கமுடியாது ஆனால் அது அதன் ராணியின் குழந்தைகளை பேணி வளர்க்கும். இந்த மூன்று பில்லியன் வருடங்களில் ஒரு செல் உயிரியிலிருந்து ஆறு அறிவு மனிதனாக மாற இயற்கைத் தேர்வும் (Natural selection), மரபணுப்பிறழ்வும் (Mutation) மட்டுமே காரணமாக இருக்க முடியாதெனவும் இதுபோன்ற தியாகங்களும் மிக முக்கியமென சொல்கிறார் மார்டின் நெளக் (Harvard University, USA). நீங்கள் Discovery, NGC, AP-ல் பார்க்கும் உயிரைப் பணையம் வைத்து தன் குட்டியைக் காப்பாற்றும் மானும், சின்னம்மையில் நீங்கள் படுத்தால் மாரியம்மனுக்கு விரதமிருக்கும் உங்கள் அம்மாவும் தியாக உருவாக மாறி உங்களை காப்பாற்ற முயலும் குடும்ப பந்தங்களாலும், பிறர்க்காக விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலமாகவும் ஒரு இனத்தின் வளர்ச்சி ஓங்கும்மென்றும் இது போன்ற குடும்பங்களை Natural selection விரும்புமென்றும் டார்வின் சொல்லியிருக்கிறார்.


டார்வின் கொடுத்த இந்த துப்பை வைத்துக்கொண்டு வில்லியம் ஹேமில்டன் (1936-2000) என்னும் இங்கிலாந்தைச் சார்ந்த பரிணாம ஆராய்ச்சியாளர் ’தியாக’ங்களை Inclusive fitness எனும் சமன்பாட்டில் கொண்டுவந்து டார்வினின் எதிர்கொண்ட பிரச்சினைக்கு விடை கொடுத்தார். அதாவது, உங்கள் உறவுக்காரர்கள் உங்களையொத்த குணமுள்ளவர்கள் (எதோ ஒரு வகையிலாவது – நல்லதோ/கெட்டதோ) அந்த குணமே உங்கள் குடும்பத்தில் மேலோங்கியிருக்கும். அதனால் ஒரு குடும்பத்தில் ’தியாகி’கள் சில இருந்து தானழிந்து தன் குடும்பத்தை வாழையடி வாழையாக பெருகுவர். குடும்ப உறுப்பினர்கள் பெருகுவார்கள், அந்த குடும்பம் பெருகுகிறது. இந்த குடும்பம்போல் தான் ஒவ்வொரு உயிரிக்கும். எடுத்துக்காட்டிற்க்கு, ஒரு வகையான அணில் தன்னை இரையாக்கவரும் விலங்கைப் பார்த்ததும் கத்தி தன் சக அணில்களைக் எச்சரிக்கும், அதன் சப்தத்தில் அந்த விலங்கிடம் தான் சிக்கிக்கொள்ளும் – இந்த ’தியாக’ அணில் இரையாகக்கூடும் ஆனால் மற்ற அணில்கள் காப்பாற்றப்படும், இப்படி சில தியாகிகள் இறந்தாலும் அந்த குழுமத்திற்க்கு கடைசியில் நன்மையே. மாறாக, அந்த அணில் தான் மட்டும் தப்பி இருந்தால் அந்த குழு சில அணில்களை இழந்திருக்கும். இப்படி அந்த குழு எண்ணிக்கை குறைந்துகொண்டே போயிருக்கும். ஒரு உயிரின்/குழுவின்/குடும்பத்தின் பரிணாம வெற்றி அதன் நகல்களின் எண்ணிக்கையில்தான் உள்ளது அதனால் உதவி/தியாகத்தினால் ஒரு உயிரின்/குழுவின்/குடும்பத்திற்கோ எந்த கெடுதலும் எற்படாது மாறாக நன்மையே ஏற்படும். 


மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒரு குழுவிற்கோ, இனத்திற்கோ, உயிரிற்கோ பொது. இப்படியான sacrifice, cooperation, altruism போன்ற குணங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிரி தன் பரிணாம வெற்றிக்காக அந்தந்த உயிரினங்களில் இயற்க்கை ஏற்ப்படுத்தியுள்ளது என்பதைத் தாண்டி நம்மால் அவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.


டிஸ்கி:
நீ கவிதையெழுதினா யாருக்கும் ஒரு பைசா பிரயோஜனமில்ல, உருப்படியா எதுனா எழுதுனா தேவலாமென்று சொன்ன நண்பர்களுக்காக. இது உபயோகமானதான்னு தெரியல, ஆனா இந்த வருடம் டார்வினின் 200-வது பிறந்த வருடம் மற்றும் அவர் எழுதிய The Origin of Species-ன் 150-வது ஆண்டு விழாங்கறதுனால இது.


References:
1. Darwin, C. R. 1859. On the origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life. London.
2. Science (2009) Vol. 325. no. 5945, pp. 1196 – 1199.
3. Dawkins, R. 1976. The Selfish Gene. Oxford. London
4. http://en.wikipedia.org/wiki/Inclusive_fitness

Photo courtesy: sciencemag.org

-

9 comments:

  1. இது தாரணை தானான்னு ரெண்டு முறை பேஜ ரெஃப்ரெஷ் செஞ்சு பாத்துக்கிட்டேன்... ;))

    ReplyDelete
  2. //நீ கவிதையெழுதினா யாருக்கும் ஒரு பைசா பிரயோஜனமில்ல, உருப்படியா எதுனா எழுதுனா தேவலாமென்று சொன்ன நண்பர்களுக்காக.//

    யார் அந்த தைரியசாலி?? ;))))))))))) பதிவு நன்று.. :))

    ReplyDelete
  3. :) என் நண்பர்கள் தான் (யாருக்கும் இதுவரைக்கும் ஒரு கவிதை புரிஞ்சதில்ல அந்த) கடுப்புல சொன்னது. நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  4. Gandy, unmaiyaavae eludhuvannu nenaikkala. Thanx. Aana ippadi eludhininaa ellaarukkum (kavidhai puriyaadha engalukku) useful-a irukkumilla. Innimae indha maadhiriyum eludhu matchi, nallaarukku.

    ~vasant

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றிங்க காந்தி :-)

    ReplyDelete
  6. @Vasant

    வாடா, உன்ன பத்திதான் மேல ஒருத்தர் கேக்கறாங்க பாரு ;) அறிவியல் கட்டுரை கஷ்டம்டா. எழுதறது ஒகே ஆனா References தேடிக் கண்டுபிடிக்கணும் அப்பறம் நுணுக்கமா எழுதணும். நாங்க அப்படி எழுதினா அசாம வந்து படிச்சுட்டு போவீங்க இல்ல?

    -

    @புனிதா

    நன்றி உங்கள் ஆதரவிற்க்கு

    ReplyDelete
  7. Very interesting.

    சில சிந்தனைகளும் :-

    அந்த வேலைக்கார தேனீ / எறும்பு - இவைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால் - வாழ்வின் பொருள் தெரியாமல், பிடிப்பு இல்லாமல் சீரழிய நேரிடும். அதை மறக்க எல்லா சக்தியையும், மற்றவர்க்கு செலவிட்டு, தம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தர முயலும் ஆதி உணர்வு தான் இதுவும். எப்படி, எப்படியாவது இனப்பெருக்கம் செய்வது ஒரு ஆதி உணர்வோ, போலவே வாழ்வை அர்த்தமாக்கிக் கொள்வதும் ஒரு ஆதி உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம். In that sense, it may not necessarily be a sacrificial act rather an effort to find meaning to one's own life in the absence of any other meaningful prospect. I know it sounds cynical. Just a counterpoint :)

    நல்ல கட்டுரை காந்தி.

    அனுஜன்யா

    ReplyDelete
  8. நன்றி அனுஜன்யா.

    தன்னை அழித்துக்கொண்டு தம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தர முயலும் ஆதி உணர்வு? :)))))))

    ReplyDelete
  9. எல்லா உயிர்களும் தங்களது இருப்பை இந்த பூமியில் தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றன. எனினும் உடல் நிலையானது இல்லை. அழியக்கூடியது. இனபெருக்கம் எனபது அடிப்படையில் தனது இருப்பின் நிலைபடுதலின் செயல்பாடுதான். இதில் ஒருதளைமுரையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தான் கற்றுக்கொண்ட வாழ்கை பாடங்கள் அனுபவ பதிவுகளாக genes அனுப்படுகின்றன. இது பரிணாம வளர்ச்சியின் அடிப்படை கூறு ஆகும்.

    பல வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் படித்த ஒரு செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தாய் பூனை தான் ஈன்ற குட்டிகளில் ஒருசிலவற்றை தானே உண்டு விடுமாம். அவ்வாறு உண்ணப்படும் குட்டிகள் உண்மையில் ஏனைய குட்டிகளை காட்டிலும் சரியான வளர்ச்சி இல்லாமல் பலகீனமான குட்டிகளாக இருக்குமாம். இதன் காரணம் தனக்கு பினனால் வரும் தனது சந்ததி சிறப்பானதாக இருக்கவேண்டும் என்ற அந்த தாய் பூனையின் அடிப்படை உள்ளுணர்வு ஆகும். பலகீனமான குட்டிகள் மேலும் பலகீனமான தலைமுறை இருப்பை உருவாகும். இது பரிணாம வளர்ச்சி அல்லது தான் சார்ந்த இனத்தின் உயர்வுக்கு வழி வகுப்பதாக இருக்காது. எனவே பலகீனமான குட்டிகளை அழிப்பதின் மூலம் தாய் பூனை நல்ல சந்ததியை தெரிவு செய்கிறது. மேலும் பலகீனமா குட்டிகளை உண்பதின் மூலம் கிடைக்கும் protein மற்ற குட்டிகளை பேணுவதற்கு உதவும்.

    இனபெருக்கத்திற்கு துணையை தேர்வு செய்வதில் கூட சிறப்பானதை தெரிவு செய்ய பல விலங்குகள் பல முறைகளை வைத்து உள்ளன. இனபெருக்கம் செய்யாத பிற உயிர்கள் தான் சார்ந்த இனத்தின் உயர்வுக்கு வேறுவகையில் உதவுகின்றன.

    அனுஜன்யா, உங்கள் கருத்து அருமை. நீங்கள் கூறும் ஆதி உணர்வு எனபது அடிப்படையில் இந்த பூமியில் தனது இருப்பை நிலைப்படுத்தும் உள்ளுணர்வு என நினைக்கிறேன். பல அரசர்கள் பெரிய கோவில், மாளிகை போன்றவை கட்டுவது கூட இவ்வகை சார்ந்தது என நினைக்கிறேன்.

    நல்ல பதிவு. தொடர்ந்து இதுபோன்ற பதிவை இடுங்கள்.

    நன்றி.
    சிவா

    ReplyDelete