Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, August 30, 2025

பெருந்துணை

AI generated image
ஏதேதோ சாயல் ஏற்று
திரிந்த என் காதல்
ஒரு சுக்கில பட்ச ஏப்ரல் நாளில்
உன்னுள் நிறைந்து
நிச்சலனமாய்
இன்று வரை
உறங்கிக் கொண்டிருக்கிறது!

விழித்து வெளியேற 
எல்லைகளற்ற உன்னுள்,
திசைகளற்று
பயணித்துக் கொண்டேயிருக்கும்!

என்றாவதொரு நாள்
அறிவழிந்து
உயிர்த்தெழுந்து
நடைபிறழ்ந்து
வெளியேறக்கூடும்!

உன் கதவுகளை மூடாமல்
காத்திரு!
என் காதலை மன்னித்து,
கண்கள் மூடி
அந்தரங்க முத்தமிடு!

பெய்யென பெய்யும் 
ஒரு மழையிரவில்
உன் உள்ளங்கை
மென்சூட்டின் 
வெப்பம் தேடி 
உன்னருகே 
வீழ்ந்துகிடக்கும்!

நீ கோதும் விரல்களிடுக்கில் 
நுழைந்து 
மீண்டும் 
கடல் காணும் 
நதி போல
உன்னுள் மீண்டும் 
கரையக் காத்திருக்கும்! 

மீண்டும் என் காதல்
என்றாவதொரு நாள்
அறிவழிந்து
உயிர்த்தெழுந்து
நடைபிறழ்ந்து
வெளியேறக்கூடும்!

எப்போதும்
உன் கதவுகளை மூடாமல்
காத்திரு!


-- அன்பு மனைவிக்கு --


Wednesday, June 18, 2025

Will bend my lock to match your key...

 

Photo Courtesy: https://www.youtube.com/@barelyjazzmusic

இன்று வரையிலான 
என் வாழ்க்கை 
முழு நிறைவானது -- 
’NRI பொழுதுகள்’ கவிதையில்
நான் யாசித்தவை போலவே.

இந்த மழை நாட்களில்,
நிறைந்த மனதின் ஊடே
நெற்றி சாய்கையில்,
ஒற்றைநாண் கிரீச்சிட்டு,
தொடர்பிழந்த,
எனைக்கடந்த 
என் தேவதைகள் 
ஒவ்வொருவராய்
நினைவில் பிறக்கின்றீர்!

இதை எழுதும்
மெல்லிய Jazz நேரத்தில்,
மனம் மெதுவாய் 
அழுகும் மெளனத்தில்,
நான் யாசிப்பது
ஒன்றுதான்!

உங்களுடன்
வெறும் நினைவுகளாயில்லாமல்,
வெறும் வரிகளில் அடைக்காமல்,
ஒரு முழு வாழ்க்கை —
ஒவ்வொருவருடனும்
வாழ்ந்து தீர்க்கவேண்டும்!

ஒரு சூரியன் முழுவதும்
பொழிந்த பிறகு
மண்ணுக்குள் தேங்கும்
வெப்பம் போலவே
உங்கள் ஒவ்வொருவரின் பொழிவு
என் ஒவ்வொரு செல்களிலும்
நிறையவேண்டும்…
நிறைந்து பெருகவேண்டும்…
பெருகி வழியவேண்டும்…
வழிந்துத தீர்க்கவேண்டும்!
ஒவ்வொருவராய்!

இந்த என் வாழ்கை 
என் மனைவிக்கானது!
அது போதுமான பாக்கியம்!
இது 
எத்தனை யுகங்கள் 
நான் கிடந்த தவமென 
அறியேன்!

என்றாவதொருநாள்
இந்த பெருவானத்து 
நட்சத்திரமாவேன்...

உங்கள் நினைவை உரமூட்டி
தகித்தெறிந்து
எரிநட்சத்திரமாய்
மீண்டு வருவேன்.

அதுவரை 
தயவுசெய்து 
எனக்காக
காத்திருங்கள்!

---

Sunday, March 12, 2017

மையிருட்டு


மாங்கல்ய மஞ்சள்
வீணையிசை
புல்லாங்குழல் காற்று
கற்பூர வாசனை
தங்க ஒளி
தாமிரத்தண்ணீர் 
ஸ்படிக வெளிச்சம் 
அடைகாத்தலின் சூடு
நிசப்தம்
மனைவியின் காதல்
களவினப்பறம் அவள் பார்வை

இவையனைத்தும் திகட்டிக் கடந்தவொரு
மார்கழி முன்னிரவில்
ஆறாத கொடும் பசியுடன்
என் உணர்கொம்புகளால்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...
நிலைகொண்ட,
கணப்பிறழ்வு திகட்டாத
மையிருட்டின் ஸ்பரிசம்.

நிகழ்ந்து கொண்டிருக்கும் 
நிறைவற்ற ஜ்வாலையில்
பயணிக்கும் சிற்றெரும்பு நான்.
சுற்றியிழுக்கும் இதன் விளிம்புதாண்டி
அடர் இருட்டு பாய்மம்
அடையாவிடின்
வாழ்ந்து மரிப்பது
தற்கொலையோ?

02.03.2017
---

Wednesday, July 06, 2016

Liar's paradox

தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்?
பத்திரகிரி


என் சாலைகளின் நடுவே
எப்போதும் முளைத்து நிற்கிறது 
ஒரு புல்!

கடந்துபோக 
அத்தனை எளிதாய் விடுவதில்லையது!
பளீரென இளம்பச்சையாய்,
படர்ந்து கொண்டேயிருக்கும்
அந்த இரவின் மையிருட்டுவரை!

கொஞ்சம் கொஞ்சமாய்
உட்புகுந்து
விடியற்காலை
மாபெரும் விருட்சமாகி
செழித்திருக்கும்
அந்த புல்!

மறைந்துகொண்டேயிருக்கிறது
என் சாலை
புணர்ச்சிக்கு 
பிந்தைய காமம் போல!

திடீரென
கடும் பசியுடன் விழிக்கும்
என் மிருகம் 
அலைந்து திரியும்...
ஒரு பௌர்ணமி இரவில்
தேடிப்பிடிக்கும்
அந்த சாலையை!
அதன் சாலையை!

மறுமுறை வரும் மழையில்
புல்லோ, நித்தியமல்லியோ
முளைத்துவிடலாம்!
அதற்குள்
இந்த சாலையை
கடந்தே ஆகவேண்டிய
கட்டாயமெனக்கு!

---

Thursday, February 18, 2016

The Font

I dug into my heart 
deeper 
to see who is inside, 
the more I dug, 
the more I lost me. 
- Rumi


இத்தனை நாளில் அன்றுதான் தெரிந்தது!
என் மகிழம்பூச் சட்டையை
ஏதோவொரு
கவிதையில் 
முன்னமே யாரோ 
அணிந்திருக்கிறார்கள்!

அந்த புள்ளியிலிருந்து
தொடங்கி
எனை மொய்த்து கொண்டேயிருக்கிறது
நான் சிறுகச் சேர்த்த
என் போலிகள்!

பிழை திருத்துபவனின்
அவசரத்தில்
அன்றிலிருந்து
தேடிக் கொண்டேயிருக்கிறேன்.
என்னுடைய நான்!
ஏதாவதொரு நான்!

தலை வகிடு,
எழுத்துக்கள்,
வார்த்தைகள்,
பிடித்தவைகள்,
ரசனைகள்,
அனைத்திலும்
எவரோவொருவரின் பிம்பம்
விழுந்து
சில்லுகளாய் சிதறிக்கொண்டேயிருக்கிறேன்
இன்றுவரை!

வெறுமை படர்ந்தயிரவில்
நிலைகொள்ளாமல்
குமட்டி
எல்லோரையும் வெளியேற்றி
வேறுவொரு கூட்டத்தை
மட்டுமே
நிரப்பியிருக்கிறேன்!

ஜெயித்ததைத் தோற்கும்
அதே சூதாடி தான்!
இன்றுவரை...

சட்டையின்
மகிழம்பூக்கள் 
ஒவ்வொரு இதழாய்
உதிர்ந்து
ஒருநாள் நான்
நிர்வாணமடையக்கூடும்!

ஆனால்,
முன் எப்பொழுதாவது
நான் உங்களிடம் பழகியிருந்தால்,
இந்த கவிதையை
உங்களைப் போலவும்
வாசித்திருக்கக் கூடும்!

Monday, October 26, 2015

முகம்



இதோ காடு நோக்கி
பிரயாணப்பட்டாகிவிட்டது!

அங்கு வந்து
மட்க காத்துக்கிடக்கும் 
என் எலும்புகளிடம்
உங்கள் தடயங்களை
தேடாதீர்கள்...

உங்களால் 
உடைக்கப்பட்ட 
என் பிம்பத்தை 
முனை மழுங்காமல்
விட்டத்தில்
ஏற்றியிருக்கிறேன்...
ஒவ்வொருமுறையும்!

என் வாசனைக்காக
என் படுக்கையருகே
ஒதுங்கும்போது
ஒரு கணமேனும்
படுத்துறங்கி
என் விட்டத்தில்
விழியுங்கள்.

உங்களின்
ஒவ்வொரு 
முகமும்
ஒவ்வொரு
சில்லில் தெரியும்.

உங்களில் யாரேனும்
ஏதோவொன்றை
அருவெறுப்பாய் 
உணர்வீர்களானால்
என் தோட்டத்தில் 
உங்களுக்காக
பவள மல்லி
வளர்த்துள்ளேன்.

இல்லையெனில் 
ஓர் வெறுமை படர்ந்தயிரவில்
நீங்கள் தீனியிட்ட
என் தோட்டத்து
கருநீல பாம்பொன்று
உங்களை கவ்விச் செல்லட்டும்!

அதுவரை,
என் மரணம்
எனக்கு ஆழ்ந்ததொரு
அபத்தத்தையே அளிக்கும்!

-

Tuesday, March 03, 2015

கூழாங்கல்


ஓயாத அலையாய்
அடித்துக்கொண்டேயிருக்கிறது
என்றோ
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய்
உணரவைத்த நம்
காதல்

பேய் மழையாய்
துவங்கி
பெரும் வெள்ளமாய்
தொலைந்தே விட்டது
திருமணத்தில்.

அடியாழத்து பாசிபடர்ந்த
கூழாங்கல்லாய்
நமக்குள்தான் 
எங்கேயோ இருக்கக்கூடும்.

மாலையில் கீழ்வானம்
வரைந்து வைக்கும் 
ஆரஞ்சு நிறங்களில்
தேடிப் பார்ப்போம்.
இன்றும் தென்படவில்லையென்றால்
பரவாயில்லை...
நாளைக்கு உன் வசதியெப்படி?

-
Photo courtesy: © Romantic couple by the ocean at sunset

Tuesday, February 19, 2013

ரௌத்திரம்





மண் தின்னும் செடியின்
எதோவொரு கார்பன் துகளில்
என்றாவது
வேர்புகுந்து
பெருக்கெடுத்து
மேலேறி
அக்னியாய் எரிந்தே தீரும்
என் ரௌத்திரம்!
அதுவரை
பழித் தினவடங்காது
அலைந்து கொண்டேயிருக்கும்
இன்று என்னுள்ளும்
மரித்து பின்
வேறு பிண்டத்திலோ
அல்லது
இன்னபிறவற்றிலோ
திரிந்துகொண்டேயிருக்கும்
நான் எனும்
நான்.



Saturday, November 12, 2011

ஜீவசலனம்


(Photo courtesy: © Gregory Reade sculpts)

பேருருவ அவமானம்
தாங்காமல்
ஒவ்வொரு முறையும்
நெடுந்தொலைவு கடந்தபின்னும்
விநோதமானவொரு சூன்யத்தில்
ஒருக்களித்து சாய்ந்து
கண்ணீர் கொட்டி
காத்திருக்கிறதென் ஜீவசலனம்.

என் மூச்சுக் காற்றில்
ஊளையிட்டு அலையுமது
விழுங்கியே வைத்திருக்கிறது
எனையும், இன்னபிற
எனைப் பற்றியவைகளையும்.

ஒவ்வொரு முறையும்
முளைத்து,
எத்தனித்து,
விடைத்துப் படருமென் எலும்புகளை
ருக்கி, கூழாக்கி,
கூப்பிடுதூரத்தில் புதைத்து, மக்கச்செய்யும் அது
என் நிழலில் ஒளிந்து
அடுத்த சந்தர்பம் எதிர்நோக்கிக்
கடுந்தவமிருக்கும்!

எஞ்சியிருக்கும் நம்பிக்கையிழப்பின்
ஒட்டுமொத்த சூன்யத்தில்
அகாலமாய் இறக்குமென்னால்
ஒரு நொடி
மெளனத்தை கூட
அஞ்சலியாக்க முடியவில்லை
எனக்காக!

-

Saturday, June 19, 2010

சுயம்

inner cry...

கனவுகளின் கனத்த பிம்பங்களிலிருந்து

மீண்டு விழித்ததும்
அதீத கூக்குரலெடுத்து 
கதறுகிறதென் சுயம்.
ஏதோவொரு
ரோமநிறம் மாறிய நாளில் தான்
அதுவென்னுள்
நுழைந்திருக்கவேண்டும்.
எனக்கு வெளியே
என் சுயமென்பது
வெறும்
பிம்பமாகிப்போனதில்
அத்தனை சௌகர்யம்.
எடுப்பான அடையாளங்களை
தேர்ந்தெடுத்து அடுக்கி,
யார்யாரையோ
பூசி மொழுகப்பட்ட
அச்சு அசலானவொரு 
கூழ்மம் நான்.
யாருமற்ற
யதார்த்தத்திலிருந்து
விலகிய
கணங்களில் மட்டும்
ரணம் கமழும் அவஸ்தை.


Photo courtesy: © 
Alexandru Bizighescu.
-

Wednesday, February 17, 2010

எனக்கானவை


நீங்கள் எரிக்கும்
என் பிணம் சிதறி வீழ்கையில்
வறண்டு, வாய் பிளந்ததும்
ஜீவாலையாக மாட்டேன்!
அகாலமாய் இறக்காமல்
உயிர் மட்டும் பறித்து
நெடு ஆழத்தில் புதைத்துவைப்பேன்.
என் உடல் தின்று செரித்து
காத்திருப்பேன்...
ரணங்கள் வலியெடுத்துக் கதறும்
குளிர்காலப் பகற்பொழுதொன்றில்
முனை மழுங்கிய என் விரல்களை
தேடிச்சென்று கூர் தீட்டி
தூரத்து கடல் நீரின்
ஈரம் உறிஞ்சி
செரித்த அணுக்களனைத்தும்
செலுத்தி
வேர் விட்டு,
வார்ப்பிரும்பு சங்கிலிகளுடைத்து
முளைத்தெழுவேன்!
துளிர்க்கும் அந்த நாள் முதல்
இது
எனக்கான மண்
எனக்கான வானம்
எனக்கான காடு...

Image courtesy: velhametsa.
-

Tuesday, February 02, 2010

நொடிக்கொரு துளி



நாளைக்கான சமன்பாட்டில்
தவிர்க்கயியலாமல்
நேற்றைய என் சிதையும்
இன்றைய எச்சமும்
எப்படியும் ஒட்டிக்கொள்கின்றன...
கதறியழுத பின்னும்
மாறமுடியாத என்னை
தீயிலிடுவதாய் எழுதி
பேனா முனை நசுக்கியிருக்கிறேன்
ஏழாவது முறையாய்.
என் கதவுகளினுள் இன்றும்
பூட்டியே கிடக்கிறேன், 
என்றாவது விழித்துப்பார்க்கையில்
நானற்றதாகவே படுகிறது உலகம்.
முத்து, சிவக்குமார், சங்கர் வரிசையில் 
நாளை நானுமிருக்கலாம்!
என்ன செய்ய
அனைத்தையும்
வேடிக்கை பார்த்திருப்பதைத் தவிர..?
நொடிக்கொரு துளியாய்
சிந்திக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-

Monday, November 16, 2009

புதியன புகுதலும்...


குப்பையில் கிடத்திய
கிழித்த நாட்களின்
தவணை நினைவுகளை
அவள் நிரம்பிய சவப்பெட்டியில்
திணித்து
புதைக்கவைத்தது
நேற்று சந்தித்தவளின்
ஈஸ்ட்ரோஜன் வழியும் நளினம்.
ஒற்றைப் பார்வையில்
ஒளிபரப்பிக்கொண்ட
சம்மதங்கள் தாண்டி
பற்றியெறித்தது ஆதிக்கனல்.
சாம்பலாகையில்
எப்படியெனத் தெரியாமல்
நெருக்கமாகிவிட்டாள்
முன்னவளை விட
ஒரு சதமேனும்!


Photo courtesy:  zycu.com
-

Tuesday, September 08, 2009

சொல்ல மறந்தவை


நீ வீசியெறிந்த மெளனத்தில்
அலை தளும்பி நிற்க்கிறதென் குளம்
கரையொதுங்கும் சில குமிழிகளுக்கு மட்டும்
சொல்லிவைப்பேன்
உன்னிடம் சொல்ல மறந்தவைகளை.
ஆகாயம் வீசும்
பேய்க்காற்றில்
அவை உடைவதற்க்குள்
ஒரே ஒரு முறையேனும்
என் குளத்தில்
கால் நனைத்து செல்.



Photo courtesy: free-background-wallpaper.com
-

Wednesday, September 02, 2009

சிலுவை

என் போலவே
சிதறியிருந்த கூட்டத்தில்
அவள்மட்டும்
எனை
உருக்கிடும் ரசாயனங்களை 
செய்து கொண்டிருந்தாள்.
கரைந்துகொண்டிருந்தேன்.
கடற்கரையில்
நாற்பது டிகிரி வடக்கில்
தனியாய்
அமர்ந்த அவளுக்கு
கண்மூடி ஜீவரகசிய
முத்தமிட்டேன்.
இதழ் பிரிக்கையில்
நூல் அறுந்து
ஒட்டிகொண்ட
எச்சில் குமிழிகளில்
தொடங்கி 
கொட்டிய நீரைப்போல்
படர்ந்து
நிரம்பிவழிந்து கொண்டிருந்தாள்.
சிவந்த கண்களுடன்
மொழியின் வசமற்று
வாய் பிளந்து...
கண் திறக்கும் 
பொழுதிற்க்குள்
என் காலடியில்
எனக்கான சிலுவை
முளைத்துக்கொண்டிருந்தது...

Photo courtesy: tbclink.org
-

Monday, August 31, 2009

கலவை

இத்தனை நாட்களில்
எதுவாகவும்
ஆகமுடியவில்லை
நல்லவனாகவோ,
கெட்டவனாகவோ.
முழுதும்
உண்மையானவனாகவோ,
ஏமாற்றுபவனாகவோ.
எல்லோரிடமும்
காண்பிக்கவும்

ஒளித்து வைக்கவும்
அவரவர்களுக்கான
சிற்சிலவற்றை வைத்துள்ளேன்.
தனிமையில்
எதாவது ஒரு நேரத்தில்
இப்படி கலவையாகவோ
அல்லது
கலவையின் கலவையாகவோ
உணரும்போது
என் கண்ணாடி பிம்பங்களில்
அழுக்கின் கனம் மட்டும் கூடியிருக்கிறது.
இப்போது,
இந்த மூலையில்
வன்மையான கசப்புடன்
என்னை தேற்றிக்கொள்ள வைப்பவை
அவரவர்க்கான
அழுக்கு தோய்ந்த
அவரவர் பிம்பங்கள் மட்டுமே.


Fyodor Dostoyevsky (1821-1881)க்கு...

Picture courtesy: chuckypita.com

-

Wednesday, August 26, 2009

நாவினாற் சுட்ட வடு

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.

Photo courtesy Imapix.
-

Monday, August 24, 2009

நகரமுனி

சலித்த விட்டுக்கொடுத்தல்கள்,
புறக்கணிப்பு காயங்கள்,
கொல்லப்பட்ட காதல்,
மறுக்கப்பட்ட அன்பு,
நம்பிக்கையிழப்புகள்,
அவமானங்கள்,
அறுந்த உறவுகளென
தேர்ந்தெடுத்த கூரிய காயங்களை
எதிர்படும்
காலங்களில்
தடயங்களின்றி அழிக்கப்படவேண்டி

நாட்குறிப்பின் கிழிந்த இடங்களில்
தோண்டியிருக்கிறேன்
அதனதன் சவக்குழிகளை
அந்த அடர் இருட்டு பக்கங்களில்,
அவர்களுக்கான
அன்பு பூசிய
சொற்களுக்கு
அன்றன்று பூத்த
பாரிஜாத பூக்களையும்
சொருகியிருக்கிறேன்.
கனத்த பெருமழை வெறும்
பேரிரைச்சலுடன் பேய் மழையாகும்
செய்ய ஏதுமற்ற
நரைத்த நேரத்தில்
காய்ந்த
பாரிஜாத பூக்கள் தோய்ந்த
கிழித்தபோது ஒட்டிக்கொண்ட
ஒவ்வொரு பக்கங்களிலும்

படுத்துறங்கி
அவ் ஒவ்வொருவர் மீதும்
தனித்தனியாய்
பற்றில்லாமல்
காதலில்லாமல்
காழ்ப்பில்லாமல்
துக்கமில்லாமல்
வன்மமில்லாமல்
சிரிப்பில்லாமல்

விடியும் என் பொழுதுகள்.

Photo by Grafter.
-

Thursday, August 20, 2009

ஆதாம் பறித்த ஆப்பிள்

விழித்ததும்
பிரிந்ததுணரும் முன்னர்
உனை அழைக்க அழுத்தப்பட்டது தொடங்கி
முதல் ரிங்கிற்க்கு முந்தைய
மில்லி நொடியில்
எனை கவ்வ
காத்திருக்கிறது
ஒரு விலங்கு.
பேசும் முன் துண்டிக்கவைத்து
நிரம்பிவழியவிடும்
என் வெற்றிடங்களை.
விடுபடலோ
விடுதலையோ
சாத்தியமில்லை
அதனிடம்.
தெரிந்தே உன் எண்ணை
அழுத்தியவொரு
மதிய வேளையில்
பழகிய தாமதத்துடன் வந்து
உயிர் கத்தியழுது கதறியும்
என் தலை கவ்வி
துளித்துளியாய்
ரத்தம் சொட்ட
எல்லோருக்கும் பரிமாறும்
எல்லோரும் விரும்பியபடியே
நானில்லாத
அவர்களுக்கான என்னை.

-

Wednesday, August 12, 2009

Achilles’ heel

நீயற்ற வாழ்வின் சமன்பாடுகளின்
விடைகளுக்காக
நெடுநாள் காத்திராமல்
இறந்துவிட்ட அன்பின்
இறுதிச்சடங்கில்
துக்கமோ
விரக்தியோ
அல்லது
எதுவெனத்தெரியாதவொன்றால்
விம்மி பின்
உடைந்து அழுது
புதைத்து திரும்பும் வழியில்
உனை
தொலைக்கவும்,
சுமக்கவுமியலாமல்
கூனல் விழுந்து
உன் கைக்குள்
சுருங்கிக்கொள்கிறேன்.

உனையும் புதைத்துவிட்டு வருவதாய்
சொல்லிவந்த
என் வீட்டு
கண்ணாடியிடம்
என்ன சொல்ல?

-