Monday, May 09, 2011

பரிணாமம்: டார்வின் மற்றும் வாலஸ்

சார்லஸ் டார்வின் (Charles Darwin, 1809-1882), தனது 5 வருட கடற்பயணத்தில் தொகுத்த ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 1830-களின் கடைசியில் பரிணாமக் கோட்பாடு ஒன்றை உருவாக்கி அதை பல்வேறு காரணங்களால் வெளியிடாமலிருந்தார். கடவுள் மனிதனை நேரடியாகப்படைத்தார் என்று நம்பிக்கொண்டிருந்த காலமது அதனால் தன் கருத்தை நிரூபிக்க தகுந்த ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார். அதற்காக சுமார் 20 வருடங்கள் ஆரய்ச்சி செய்தார். அதேகாலத்தில், ஆல்ஃப்ரெட் வாலஸ் (Alfred Wallace, 1823-1913) என்பவரும் தனியாக பரிணாமத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

ஆல்ஃப்ரெட் வாலஸ் (Photo courtesy: © University College London)


சார்லஸ் டார்வின் (Photo courtesy:  © Flickr.com/serkel)

இவர்கள் இருவருக்கும் பொருளியல் (Economics) மேதையான தாமஸ் மால்தஸ் (Thomas Malthus, 1766-1834) 1797-ல் வெளியிட்ட An Essay on the Principle of Population as it affects the Future Improvement of Society-ல் மக்கட்தொகை பெருக்கத்தையும் உணவு தட்டுப்பாட்டையும் இணைத்து தாமஸ் தெரிவித்த கருத்துதான் பரிணாமம் பற்றிய தங்கள் கருத்துக்கு தூண்டுதலாக அமைந்தது. இருவரும் (தனித்தனியே) ஒரு உயிர் பரிணமிப்பதற்கு இயற்கையை சார்ந்த காரணங்கள் இருப்பதாக நம்பினர். இந்த முறையை இயல் தெரிவு (Natural Selection) என்று டார்வின் அழைத்தார். டார்வினின் ஆராய்ச்சிக்கு வாலஸ் பறவைகளை கொடுத்து உதவினார். 


1858-ல் வாலஸ் தன் பரிணாமம் பற்றிய கோட்பாடை பிரசுரிப்பதற்கு முன் அதை டார்வினுக்கு அனுப்பி அவரின் கருத்துகளை கேட்டார். வாலஸின் ஆராய்ச்சி முடிவுகள் டார்வினுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்தது. ஏனென்றால் அது டார்வினின் கருத்துக்களை அப்படியே ஒத்திருந்தது. பிறகு, 1858-ல் டார்வின் மற்றும் வாலஸின் கருத்துக்களை லண்டனிலுள்ள லின்னியன் கழகத்தில் (உலகின் முக்கியமான இயற்கை வரலாறு பற்றிய ஆராய்ச்சிக் கழகத்தில்) ஒன்றாக வழங்கினர். அதற்குப்பின் டார்வின் அதை ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கான வேலையில் இறங்கினார், வாலஸ், தன் உயிர்புவியியல் குறித்த ஆய்வுக்கான பயணத்தை தொடர்ந்தார். 1859-ல் டார்வின் On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life என்ற புத்தகத்தை வெளியிட்டார்


(Photo courtesy: © WikiMedia)
வழக்கம்போல இந்த புத்தகத்திலுள்ள கருத்துக்களை முதலில் விஞ்ஞானிகள் ஏற்க மறுத்தனர், பின்னர் பல விவாதங்களுக்குப் பிறகு உயிரினங்கள் பொதுவான மூதாதைகளிலிருந்து பரிணமித்தன என்பதை அநேகமான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், டார்வின் சொன்ன Natural Selection-ஐ பல காலம் வரை ஏற்க மறுத்தனர். 20-ம் நூற்றாண்டில், ஜீன்கள் மற்றும் தனிச்சை மாற்றங்களை (mutation) கண்டுபிடித்தபின் பரிணாமத்திற்கு Natural Selection தான் காரணமென்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்றுவரை இந்த புத்தகம்தான் அறிவியலில் அதிகம் படிக்கப்பட்ட, மிகுந்த செல்வாக்கான மற்றும் பிரபலமான புத்தகம். டார்வினுக்கு முன்னரே மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பலர் சொல்லியுள்ளனர் (7-ம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவர்கள் Anaximander மற்றும் Empedocles போன்றோர்) ஆனால், டார்வினை பரிணாமத்திற்காக கொண்டாடுவதற்குக் காரணம் இவர் தான் அறிவியல் பூர்வமாக பரிணாமத்தை விளக்கி அதற்கு பல்வேறு ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தார். ஆனால், பரிணாமம் சார்பாக டார்வினுக்கு கிடைத்த அங்கிகாரம் வாலஸுக்கு இன்னும் கிடைக்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.


Natural Selection (இயல் தெரிவு) & Natural variation (இயல் வேறுபாடு):
பல்வேறு உயிரினங்களை ஆராய்ந்த டார்வின், ஒவ்வொரு இனத்திலும் (Species) வேறுபாடு (variation) கொண்ட பல்வேறு குழுக்கள் இருக்கின்றன என்றும், இந்த குழுக்களுக்குள் உணவுக்கு, நீருக்கு, மற்றும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள பாதுகாப்பான இடம் போன்றவைகளுக்கு எப்போதுமே போட்டியிருந்துக் கொண்டேயிருக்கிறது என்றார். இது போன்ற உயிர்ப் போராட்டத்தில் பிழைத்துக் கொள்ளும் ‘தனிப்பட்ட குழுக்கள்’ தங்கள் ‘தனிப்பட்ட குணங்களை’ (heritable traits) தங்கள் சந்ததியினற்கு கடத்துகின்றன. அதனால், இந்தப் போராட்டத்தில் பிழைத்துக்கொள்ள முடியாத குழுக்களுக்கு இருப்பதைவிட பிழைத்துக் கொள்ளும் இந்த குழுக்களுக்கு அதிகமான சந்ததிகள் இருக்கும். நீண்ட காலத்துக்கப்பறம் பிழைத்துக் கொள்ளும் குழுக்கள் மட்டும் நிலைத்து நிற்கும் (Survive), மற்ற குழுக்கள் அழிந்துவிடுகின்றன (Extinct) என்றார். இப்படிப்பட்ட இயற்கையின் தேர்வுதான் Natural Selection.


குறிப்பு:
அநேகமானோர் நினைப்பது போல் ‘தக்கன பிழைக்கும்’ (survival of the fittest) என்று டார்வின் தன் புத்தகத்தில் எழுதவேயில்லை. அப்படி ஒர் வாக்கியத்தை டார்வினின் புத்தகத்தைப் படித்தபின் ஹேர்பர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer, 1820-1903) என்பவர் தான் அறிமுகப்படுத்தினார்.

-தொடரும்
-