Monday, October 26, 2015

முகம்



இதோ காடு நோக்கி
பிரயாணப்பட்டாகிவிட்டது!

அங்கு வந்து
மட்க காத்துக்கிடக்கும் 
என் எலும்புகளிடம்
உங்கள் தடயங்களை
தேடாதீர்கள்...

உங்களால் 
உடைக்கப்பட்ட 
என் பிம்பத்தை 
முனை மழுங்காமல்
விட்டத்தில்
ஏற்றியிருக்கிறேன்...
ஒவ்வொருமுறையும்!

என் வாசனைக்காக
என் படுக்கையருகே
ஒதுங்கும்போது
ஒரு கணமேனும்
படுத்துறங்கி
என் விட்டத்தில்
விழியுங்கள்.

உங்களின்
ஒவ்வொரு 
முகமும்
ஒவ்வொரு
சில்லில் தெரியும்.

உங்களில் யாரேனும்
ஏதோவொன்றை
அருவெறுப்பாய் 
உணர்வீர்களானால்
என் தோட்டத்தில் 
உங்களுக்காக
பவள மல்லி
வளர்த்துள்ளேன்.

இல்லையெனில் 
ஓர் வெறுமை படர்ந்தயிரவில்
நீங்கள் தீனியிட்ட
என் தோட்டத்து
கருநீல பாம்பொன்று
உங்களை கவ்விச் செல்லட்டும்!

அதுவரை,
என் மரணம்
எனக்கு ஆழ்ந்ததொரு
அபத்தத்தையே அளிக்கும்!

-

Tuesday, March 03, 2015

கூழாங்கல்


ஓயாத அலையாய்
அடித்துக்கொண்டேயிருக்கிறது
என்றோ
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய்
உணரவைத்த நம்
காதல்

பேய் மழையாய்
துவங்கி
பெரும் வெள்ளமாய்
தொலைந்தே விட்டது
திருமணத்தில்.

அடியாழத்து பாசிபடர்ந்த
கூழாங்கல்லாய்
நமக்குள்தான் 
எங்கேயோ இருக்கக்கூடும்.

மாலையில் கீழ்வானம்
வரைந்து வைக்கும் 
ஆரஞ்சு நிறங்களில்
தேடிப் பார்ப்போம்.
இன்றும் தென்படவில்லையென்றால்
பரவாயில்லை...
நாளைக்கு உன் வசதியெப்படி?

-
Photo courtesy: © Romantic couple by the ocean at sunset