Thursday, August 23, 2018

கேன்சர் (பகுதி 4)


புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகளில் மொபைல் போன், வைஃபை,  உணவு மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றில் மொபைல் போன்களைப் பற்றி  முதலில் பார்ப்போம்.

புற்றுநோயானது "மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்" என்று மீண்டும் மீண்டும் நம்பவைக்கப்படுகிறோம். நம் நவீன வாழ்க்கைமுறைதான் புற்றுநோயின்  காரணமாக நம்புவது முட்டாள்தனம். நவீன வாழ்க்கைமுறையில் மிகவும் அத்தியாவசியமான ஒரு சாதனம் மொபைல் போன்கள் அல்லது செல்போன்கள்.

செல்போன் பயன்பாட்டின் அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக மனிதர்களுக்கு (செல்போனிலிருந்து) ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கம்/அபாயங்களைப்பற்றி உலகெங்கிலுமுள்ள சுகாதார நிறுவனங்கள் ஆராயத்தொடங்கின.

நாம் நோக்கியாவில் பாம்பு விளையாடிய நாட்களிலிருந்தே பொதுமக்கள் மொபைல் போன்களைப் புற்றுநோய்க்கான காரணியாக சந்தேகிக்க ஆரம்பித்தனர். கடந்த 15-20 ஆண்டுகளில், மிகச்சொற்பமாக இருந்த மொபைல் போன்கள் இன்று கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கும் சாதனமாகிவிட்டது. பொதுவாக, மொபைல் போன்கள் மூளை புற்றுநோயை (glioma) உண்டாக்குவதாக நம்பப்படுகிறது! இதை சரிபார்க்க அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute, NCI) ஒரு ஆய்வை நடத்தியது. அதில், 1992 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த மூளை புற்றுநோயின் தாக்கத்தை கணக்கிட்டது. அதில் ஆய்விற்குட்படுத்தப்பட்ட 16 ஆண்டுகளில் மொத்தமாக மூளை புற்றுநோயின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை (அதிகரிக்கவில்லை). குறிப்பாக, இந்த காலகட்டத்தில்தான் செல்போன் பயன்பாடு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை அதிகரித்த காலம். மொபைல் போன்கள் புற்றுநோயை உருவாக்கக்காரணமாக இருந்தால், மூளை புற்றுநோயின் எண்ணிக்கை கணிசமான உயர்ந்திருக்க்கவேண்டும், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அதனால், செல்போனுக்கும் மூளை புற்றுநோயிக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்பற்றி மேலும் அறிய புற்றுநோய் பற்றிய ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer, IARC) 13 நாடுகளில், 30 - 59 வயது மக்களிடம், 5 - 10 ஆண்டு பயன்பாட்டை வைத்து நடத்தப்பட்ட இன்டர்ஃபோன் ஆய்வில் (INTERPHONE study) தெரிவிப்பது என்னவென்றால் செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோய்க்கும் (glioma or meningioma) எந்த தொடர்பும் இல்லை எனவும் (முக்கியமாக) அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் (glioma) வருவதற்கான ஆபத்து மிதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இவர்களின்படி ஒரு சராசரி பயனர் ஒரு மாதத்திற்கு இரண்டரை மணிநேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர் (அதாவது வாரத்திற்கு சுமாராக அரைமணிநேரம்) மற்றும் அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர் பத்து ஆண்டுகளாக ஒருநாளைக்கு அரைமணிநேரம் முதல் ஐந்து மணிநேரம் வரை செல்போன் பயன்படுத்துபவர். அதனால் IARC செல்போன்களால் உருவாக்கும் நுண்ணலை கதிர்வீச்சை (microwave radiation) சாத்தியமான புற்றுநோயுக்கியாக (possible human carcinogen) அறிவித்துள்ளது. அதாவது, அதிகமாக செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோயிற்க்கும் ஒரு அனுமான இணைப்பு இருக்கலாம் என்று மட்டுமே பொருள் கொள்ளவேண்டும், மாறாக செல்போன்கள் புற்றுநோயை உருவாக்குமென்று உறுதிப்படுத்த முடியாதென்கின்றனர்.

இதைப்பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துகொள்வதற்காக IARC 2011-ல் Cohort Study of Mobile Phone Use and Health (COSMOS) என்ற ஆய்வை தொடங்கியது, அதில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 2,90,000 செல்போன் பயனர்களை 20 முதல் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் முடிவு வருவதற்கு இன்னும் சிலகாலமாகும். அதுவரை இதைப்பற்றிய கட்டுக்கதைகளே மேலோங்கிநிற்கும். 

பொதுவாக, செல்போனில் நீண்டநேரம் பேசவேண்டியிருந்தால் ஹெட்ஃபோன்கள் (headphones) பயன்படுத்துவது நல்லது. ஹெட்ஃபோன்கள் radiofrequency ஆற்றல் வெளிப்பாட்டை தலைக்கு நேரடியாக கடத்தாமல் குறைக்கின்றன (ஏன்னென்றால் செல்போனின் ஆண்டெனா தலையில் நேரடியாக படுவதில்லை).

அடிப்படையில், நமது செல்களிளுள்ள டி.என்.ஏ (D.N.A) சேதமடைவதினால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது. அயனியாக்கம் கதிர்வீச்சு (Ionizing radiation) அணுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்களை விடுவிப்பதற்கு போதுமான ஆற்றலைக் கொண்டிருக்கும்.  X-கதிர்கள் (X-ray), காமா கதிர்கள் (Gamma rays) மற்றும் அதிகமான புறஊதா கதிர்கள் (higher ultraviolet rays) போன்றவை Ionizing radiation - இவை சக்திவாய்ந்த ஆற்றலுள்ளது. ஆனால், மொபைல் போன்கள் மிகச் சிறிய அளவே ஆற்றல் கொண்டவை. டி.என்.ஏ-வை உடைப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு மொபைல் போன்களின் கதிர்வீச்சை விட மிக அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது.

- Dr. T.K.B. காந்தி, PhD

(தொடரும்)

---

Monday, July 30, 2018

கேன்சர் (பகுதி 3)

"ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்"  
காந்தி பாபு (சதுரங்க வேட்டை, 2014)"(புற்றுநோய் - CANCER) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.
இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். கடந்த காலத்தில் ஸ்கர்வி (Scurvy) எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர். இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.
நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.
ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .
DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.
கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :
1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி 2. பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது 3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி 4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி 6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.
கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
அப்ரிகாட், லிமா பீன்ஸ், ஃபாவா பீன்ஸ் (Fava Beans), கோதுமை புல் (Wheat Grass), பாதாம், ராஸ்பெரிஸ், ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்க்பெரி , பிளூபெர்ரி, பக் வீட் (Buck Wheat), சோளம், பார்லி, குதிரைவாலி, முந்திரி, மெகடாமியா கொட்டைகள்  (Macadamia Nuts), முளைகட்டிய பீன்ஸ், இவை அனைத்தும் பி-17  நிறைந்த உணவுகள்.
இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.
பிடித்ததில் அறிந்தது"

------

மேலுள்ள Whatsapp செய்தி ஒரு குழுவில் வந்தது. இதை படித்தஒருவர்  இதிலிருக்கும் சில வார்த்தைகளை வைத்து இணையத்தில் தேடினால் இந்த செய்தியை உண்மையென நம்பும் சாத்தியங்களே அதிகம். அனால் இது மிகப்பெரிய பொய்.

லேட்ரில் (Laetrile) என்பது அமிக்டலின் (amygdalin) என்பதின் செயற்கை வடிவம். அமிக்டலின் என்பது கொட்டைகள், விதைகள், லிமா பீன்ஸ், சோளம் போன்ற தாவரங்களில் காணப்படும் ஒரு இயற்கைப் பொருள். லேட்ரில் என்பது ஒரு வைட்டமின் இல்லை ஆனால் இதைசிலர் வைட்டமின் B17 என்று எதைவைத்து அழைக்கிறார்களென்று தெரியவில்லை.

அமெரிக்காவில், 1970-களில், லேட்ரில் - புற்றுநோயிக்கு எதிரான மருந்தாக பரவலாக நம்பப்பட்டது. ஆனால், லேட்ரில் அல்லது அமிக்டலின் போன்றவைகள் புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்த வியாதியையும்  குணப்படுத்தக்கூடிய மருந்தாய் மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டதாய் எந்த ஆதாரமும் இல்லை. இன்றுவரை, மனிதர்களில் லேட்ரிலை வைத்து எந்தவொரு கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனையும் (controlled clinical trial) வெளியாகவில்லை.

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute, USA), புற்றுநோயாளிகளுக்கு லேட்ரில் சிகிச்சையளித்த மருத்துவர்களின் அறிக்கைகளை ஒரு நிபுணர் குழு வைத்து ஆராய்ந்தது. அதில் 67 நோயாளிகளில் 2 பேர் நல்லமுறையில் தேறிக்கொண்டிருந்ததாகவும், 4 பேருக்கு புற்றுநோய் கட்டிகளின் அளவு குறைந்தனவாகவும் ஊகிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சையின் முடிவில் லேட்ரில்/அமிக்டலின் எடுத்துக்கொண்டர்வர்களுக்கு மேற்கண்ட எந்த ஒரு மேம்பாடும் இருக்கவில்லை. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (U. S. Food and Drug Administration [FDA]) லேட்ரிலை புற்றுநோயக்கோ அல்லது வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் இன்றுவரை அனுமதிக்கவில்லை. FDA அமெரிக்காவின் உணவுக் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை மூலம் பொது சுகாதாரத்தை கராறாகப் பாதுகாக்கும் ஒரு பொது நிறுவனம். அமெரிக்காவில் FDA-வின் அனுமதியில்லாமல் எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வரமுடியாது. இந்தியாவிலும் மற்றநாடுகளிலும் இதுபோன்ற பொது நிறுவனங்கள் இருந்தாலும் அவை FDA-வின் ஒப்புதலை உன்னிப்பாக கவனிக்கின்றன, அங்கீகரிக்கின்றன. இன்றுவரை லேட்ரிலை ஒரு மருந்தாக எந்தவொரு நாடும் ஏற்கவில்லை.

மேலும் hand washing liquid/soap, dish washing liquid/soap போன்றவை பொது சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமானவை. இவற்றால் புற்றுநோய் உருவாகுமென்று இன்றுவரை யாரும் நிரூபித்ததில்லை.

புற்றுநோயென்பது வைட்டமின் குறைபாடல்ல. கடந்த 5000 வருடங்களாக மனிதனுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் உயிர்க்கொள்ளி நோயென்பதே உண்மை. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் நோக்கம் மருந்து விற்பனை மூலம் பெரிய லாபம்பெறுவதே என்றாலும் மருந்துகளை அங்கீகரிக்கும், கட்டுப்படுத்தும் பல்நாட்டு அரசாங்க நிறுவனங்கள் லாப நோக்கமற்றவை. அதனால், பல தரப்பட்ட விலங்குகளில் பலமுறை சோதனை செய்யப்பட்டு FDA  போன்றவொரு அரசாங்க நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே எந்த நோய்க்கும் தீர்வு. நம்பிக்கைசார்ந்த மருந்துகள் நிச்சயம் உதவாது.

இதுபோன்ற போலி செய்திகள் மருத்துவமட்டுமல்லாது பொதுவாகவே உலகின் மிகப்பெரிய பிரச்னை. அடுத்தமுறை இதுபோன்ற ஒரு தவறான செய்தியை Whatsapp-ல் பகிர்ந்துகொள்வதற்குமுன் அது உண்மையாவென அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் (genuine sites) தெரிந்துகொள்வது நல்லது மேலும் அதை பகிர்ந்துகொள்ளாமலிருப்பது அதைவிட நல்லது.

- Dr. T.K.B. காந்தி, PhD
(தொடரும்)

Tuesday, July 24, 2018

கேன்சர் (பகுதி 2)
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer [IARC]), இது உலக சுகாதார நிறுவனத்தின் [World Health Organization - WHO] கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கிளை நிறுவனம். உலகின் 184 நாடுகளில், தேசிய அளவில் புற்றுநோய்களின் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து நடத்திய ஆய்வின்படி உலக அளவில்:

1. மனிதர்களின் இறப்பிற்கு புற்றுநோய்தான் இரண்டாவது முக்கியக் காரணம் (முதலாவது இதய நோய் மற்றும் பக்கவாதம் [Ischaemic heart disease and stroke]). 

2. 2015-ல், உலகளவில் 88 லட்சம் இறப்பிற்கு காரணம் புற்றுநோய்.

3. உலகளவில், ஆறுபேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார்.

4. ஒட்டுமொத்தமாக புற்றுநோயின் தாக்கம் ஆண்களிடம் 25% அதிகமாக உள்ளது.

5. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் சுமார் 70% குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் ஏற்படுகின்றன (இந்தியா உட்பட).

6. புகையிலைதான் புற்றுநோயின் மிகவும் முக்கியமான காரணம் (புற்றுநோய் இறப்புகளில் சுமார் 22% புகையிலையினால்தான் ஏற்படுகிறது). 

---

இந்தியாவில் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை (NICPR) மற்றும் பிற நம்பத்தகுந்த அறிக்கைகளின்படி,

1. இந்திய மக்கள் தொகையை பாதிக்கும் முதல் 5 புற்றுநோய்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைத்து): 

     1. மார்பகப் புற்றுநோய் (Breast Cancer)

     2. கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (Cervical Cancer)

     3. வாய் புற்றுநோய் (Oral Cancer)

     4. நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)

     5. பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer)

2012-ம் ஆண்டின் ஆண் மற்றும் பெண்களின் புற்றுநோய் புள்ளிவிவரம் (தனித்தனியே):

© TKB Gandhi

2. 2016-ல் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2020-ல் 17.3 லட்சமாக உயரும் (25%).

3. குறைந்த விழிப்புணர்வு மற்றும் தாமதமான கண்டறிதல் காரணமாக, இந்திய பெண்களிடையே புற்றுநோய் நிகழ்வுகளும், இறப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. 

4. முக்கியமாக, இந்தியாவில் பெண்கள் ஆண்களைவிட அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் இறப்பு விகிதம் ஆண்களில்தான் அதிகம்.

5. 5. பெண்களின் புற்றுநோய் வரிசையில் (எண்ணிக்கையடிப்படையில்) சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகமுள்ளது.

6. 2015-ல், கேரளா, தமிழ்நாடு மற்றும் தில்லியில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 40% மார்பகம் (Breast), கருப்பை வாய் (Cervix), மற்றும் கருப்பை (Ovary) புற்றுநோய்களாகும்.
 
7.ஒருநாளில், சராசரியாக 2000 பெண்களில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அவற்றில் 1200 பெண்கள் (60%) புற்றுநோயின் கடைசி கட்டத்தில் உள்ளனர்.

8. தமிழ்நாட்டில் திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பிற தொழில்நகரங்கள் மாசடைந்தவையாக இருந்தாலும் ஈரோட்டில் புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில்  உள்ளது.

9. 2025-ல் உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமப்புறங்கள், பீகார், மற்றும் மேற்கு வங்காளதிற்கடுத்து தமிழகத்தின்  நகர்ப்புறபகுதிகளில் புற்றுநோயின் பாதிப்பு அதிகமிருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

10. சராசரியாக இந்தியாவில் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், கடைசி நிலைகளிலேயே புற்றுநோய்க்கான சோதனைகளுக்கு (மருத்துவமனைக்கு) வருகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சையை தொடர்ந்து பெறுவதில்லை.

மிக முக்கியமாக மேற்குறிப்பிட்ட விகிதங்களைவிடவும் இந்தியாவில் மிகுதியாயிருப்பதற்கான சாத்தியக்கூறே அதிகம். நோய் பாதிக்கப்பட்ட மக்கள் முறையான சோதனை மற்றும் சிகிச்சைக்குள்ளாவதில்லை. மற்றும் மேற்கூறிய எண்கள் இந்தியாவின் அனைத்து மருத்துவமனைகளையும்  உள்ளடக்கியதாகஇருப்பது சந்தேகமே! நிச்சயமாய் அரசும், அது சார்ந்த நிறுவனங்களும் தற்போதே விழித்துக்கொண்டு புற்றுநோய் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக அல்லது மிகவும் குறைவான விலையில் வழங்க முன்வரவேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மேல்நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் ஒருவர் இந்தநோயால் பாதிக்கப்பட்டாலும் மிகப்பெரிய பொருளாதார சுமையே. மக்கள்தொகையில் பெரும்பகுதி ஏழை மற்றும் நடுத்தரவர்க்கம் நிறைந்த இந்தியாவில் பெருகும் புற்றுநோயால் நிச்சயம் கடுமையான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

- Dr. T.K.B. காந்தி, PhD
(தொடரும்)

-----------------
GLOBOCAN project  (http://globocan.iarc.fr)
தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (http://www.nicpr.res.in, http://cancerindia.org.in)
Lancet Oncol. 2016;17(7):e272