Tuesday, February 24, 2009

சொற்கொலை




நம் பிரிவின்முன் ரயிலேறியபோது
நீ சொன்ன சொற்கள்
என் எல்லா ரயிலுக்கான காத்திருப்பிலும்
பிளாட்பாரமெங்கும் சிதறிக்கிடக்கும்.
ரணம்கூட்டும் சொற்கள்மட்டும் பொறுக்கியெடுத்து
தண்டவாளத்தில் கொலைசெய்யவைப்பேன்.
ரயிலேற்றி கொலைசெய்யப்பட்டபின்னும்
பயணம்முழுவதும் இம்சித்துக்கொண்டிருக்கும்
மரண ஓலமாய்
உன் நினைவுகளோடு...


Sunday, February 15, 2009

ஒரு வேளை


நமக்கான பாலடயாளங்கள்
மறைத்தொழித்து
உன்னுடன் ஒத்ததிர்ந்து துடிக்கிற
இதயமாகவேயிருக்க
இன்றும்விரும்புகிறேன்.

எப்போதாவது
நீ துடித்தெழுந்துணரும்
நொடிப்பொழுதில்
உன் எல்லைதாண்டி
எவ்வளவுதூரம்
சென்றிருப்பேனென்று
நிச்சயமாய்த் தெரியவில்லை...
கூப்பிடும் தூரத்தில் தென்பட்டால்
கூப்பிட்டுப்பார்
ஒரு வேளை
நான் திரும்பலாம்.

Sunday, February 08, 2009

மெல்லக்கொல்லும்விஷம்


என் மனைவிக்கான
கண்மூடிய
அந்தரங்க நேரங்களில்
அபத்தமாய்
நுழைந்துவிடுகிறது
ஒரு நொடிக்குமுன் கூட
ஞாபகமில்லாத
உனைப்பற்றியவைகள்

எதற்காகவோ...
எதையும் யூகிக்கத் தோன்றவில்லை.
நீ எனை விட
மகிழ்ச்சியாயிருப்பதாய் நினைத்துக்கொண்டு
முத்தமிடுகிறேன்
நொடிதோறும் என்னையே
நினைத்துக்கிடக்கும்
மனைவியை.

பின்னொருநாள்
உனை மறந்தது நினைவிலில்லாமல்
காலண்டரின் மார்கழித்தேதிகளிலோ,
கோவிலின் லௌட் ஸ்பீக்கர்
பக்திப் பாடல்களிலோ
அல்லது
என் மனைவியின்
விடியற்காலை பூசணிப்பூ
கோலத்திலோ தெரிந்துவிடும்
உன் பிறந்தநாள்.

நிர்ணயம் செய்யப்பட்ட
வருடத்தின் பண்டிகைகள்
போலவே சீரானவொரு
இடைவெளியில்
வந்துபோய்க்கொண்டேயிருக்கிறாய்.
பிரியும்போது
உனை மறக்கத்தேய்க்கும்
களிம்போ, மாத்திரையோ
கேட்டு வாங்கியிருக்கலாம்
உன்னிடம்.
---