Wednesday, July 06, 2016

Liar's paradox

தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்?
பத்திரகிரி


என் சாலைகளின் நடுவே
எப்போதும் முளைத்து நிற்கிறது 
ஒரு புல்!

கடந்துபோக 
அத்தனை எளிதாய் விடுவதில்லையது!
பளீரென இளம்பச்சையாய்,
படர்ந்து கொண்டேயிருக்கும்
அந்த இரவின் மையிருட்டுவரை!

கொஞ்சம் கொஞ்சமாய்
உட்புகுந்து
விடியற்காலை
மாபெரும் விருட்சமாகி
செழித்திருக்கும்
அந்த புல்!

மறைந்துகொண்டேயிருக்கிறது
என் சாலை
புணர்ச்சிக்கு 
பிந்தைய காமம் போல!

திடீரென
கடும் பசியுடன் விழிக்கும்
என் மிருகம் 
அலைந்து திரியும்...
ஒரு பௌர்ணமி இரவில்
தேடிப்பிடிக்கும்
அந்த சாலையை!
அதன் சாலையை!

மறுமுறை வரும் மழையில்
புல்லோ, நித்தியமல்லியோ
முளைத்துவிடலாம்!
அதற்குள்
இந்த சாலையை
கடந்தே ஆகவேண்டிய
கட்டாயமெனக்கு!

---

No comments:

Post a Comment