Tuesday, July 24, 2018

கேன்சர் (பகுதி 2)




புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer [IARC]), இது உலக சுகாதார நிறுவனத்தின் [World Health Organization - WHO] கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கிளை நிறுவனம். உலகின் 184 நாடுகளில், தேசிய அளவில் புற்றுநோய்களின் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து நடத்திய ஆய்வின்படி உலக அளவில்:

1. மனிதர்களின் இறப்பிற்கு புற்றுநோய்தான் இரண்டாவது முக்கியக் காரணம் (முதலாவது இதய நோய் மற்றும் பக்கவாதம் [Ischaemic heart disease and stroke]). 

2. 2015-ல், உலகளவில் 88 லட்சம் இறப்பிற்கு காரணம் புற்றுநோய்.

3. உலகளவில், ஆறுபேரில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார்.

4. ஒட்டுமொத்தமாக புற்றுநோயின் தாக்கம் ஆண்களிடம் 25% அதிகமாக உள்ளது.

5. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் சுமார் 70% குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் ஏற்படுகின்றன (இந்தியா உட்பட).

6. புகையிலைதான் புற்றுநோயின் மிகவும் முக்கியமான காரணம் (புற்றுநோய் இறப்புகளில் சுமார் 22% புகையிலையினால்தான் ஏற்படுகிறது). 

---

இந்தியாவில் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை (NICPR) மற்றும் பிற நம்பத்தகுந்த அறிக்கைகளின்படி,

1. இந்திய மக்கள் தொகையை பாதிக்கும் முதல் 5 புற்றுநோய்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைத்து): 

     1. மார்பகப் புற்றுநோய் (Breast Cancer)

     2. கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (Cervical Cancer)

     3. வாய் புற்றுநோய் (Oral Cancer)

     4. நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)

     5. பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer)

2012-ம் ஆண்டின் ஆண் மற்றும் பெண்களின் புற்றுநோய் புள்ளிவிவரம் (தனித்தனியே):

© TKB Gandhi

2. 2016-ல் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2020-ல் 17.3 லட்சமாக உயரும் (25%).

3. குறைந்த விழிப்புணர்வு மற்றும் தாமதமான கண்டறிதல் காரணமாக, இந்திய பெண்களிடையே புற்றுநோய் நிகழ்வுகளும், இறப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. 

4. முக்கியமாக, இந்தியாவில் பெண்கள் ஆண்களைவிட அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் இறப்பு விகிதம் ஆண்களில்தான் அதிகம்.

5. 5. பெண்களின் புற்றுநோய் வரிசையில் (எண்ணிக்கையடிப்படையில்) சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகமுள்ளது.

6. 2015-ல், கேரளா, தமிழ்நாடு மற்றும் தில்லியில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 40% மார்பகம் (Breast), கருப்பை வாய் (Cervix), மற்றும் கருப்பை (Ovary) புற்றுநோய்களாகும்.
 
7.ஒருநாளில், சராசரியாக 2000 பெண்களில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அவற்றில் 1200 பெண்கள் (60%) புற்றுநோயின் கடைசி கட்டத்தில் உள்ளனர்.

8. தமிழ்நாட்டில் திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பிற தொழில்நகரங்கள் மாசடைந்தவையாக இருந்தாலும் ஈரோட்டில் புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில்  உள்ளது.

9. 2025-ல் உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமப்புறங்கள், பீகார், மற்றும் மேற்கு வங்காளதிற்கடுத்து தமிழகத்தின்  நகர்ப்புறபகுதிகளில் புற்றுநோயின் பாதிப்பு அதிகமிருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

10. சராசரியாக இந்தியாவில் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள், கடைசி நிலைகளிலேயே புற்றுநோய்க்கான சோதனைகளுக்கு (மருத்துவமனைக்கு) வருகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சையை தொடர்ந்து பெறுவதில்லை.

மிக முக்கியமாக மேற்குறிப்பிட்ட விகிதங்களைவிடவும் இந்தியாவில் மிகுதியாயிருப்பதற்கான சாத்தியக்கூறே அதிகம். நோய் பாதிக்கப்பட்ட மக்கள் முறையான சோதனை மற்றும் சிகிச்சைக்குள்ளாவதில்லை. மற்றும் மேற்கூறிய எண்கள் இந்தியாவின் அனைத்து மருத்துவமனைகளையும்  உள்ளடக்கியதாகஇருப்பது சந்தேகமே! நிச்சயமாய் அரசும், அது சார்ந்த நிறுவனங்களும் தற்போதே விழித்துக்கொண்டு புற்றுநோய் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக அல்லது மிகவும் குறைவான விலையில் வழங்க முன்வரவேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மேல்நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் ஒருவர் இந்தநோயால் பாதிக்கப்பட்டாலும் மிகப்பெரிய பொருளாதார சுமையே. மக்கள்தொகையில் பெரும்பகுதி ஏழை மற்றும் நடுத்தரவர்க்கம் நிறைந்த இந்தியாவில் பெருகும் புற்றுநோயால் நிச்சயம் கடுமையான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

- Dr. T.K.B. காந்தி, PhD
(தொடரும்)

-----------------
GLOBOCAN project  (http://globocan.iarc.fr)
தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (http://www.nicpr.res.in, http://cancerindia.org.in)
Lancet Oncol. 2016;17(7):e272 


No comments:

Post a Comment