Thursday, July 19, 2018

கேன்சர் (பகுதி 1)

காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
- திருமந்திரம் (எட்டாம் தந்திரம், பாடல் 1)



இப்போதெல்லாம் புற்றுநோய் (கேன்சர்) என்ற வார்த்தையை அதிகம் கேட்கமுடிகிறது. ஒவ்வொருமுறையும் Social media-வில் யார்யாரோ கேன்சரைப் பற்றி அனுப்பிய தகவல்களை பார்த்தபோது பகீரென்றிருந்தது. அத்தனையும் முழு பொய்கள், அப்பட்டமான தகவல் பிழைகள், தவறான மருத்துவ ஆலோசனைகள். இன்றைய சூழலில் இவற்றை நம்புவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதனால், கேன்சரைப்பற்றி சராசரி மனிதன் புரிந்துகொள்வதற்க்கான ஒரு சிறிய தொடர் இது. இந்தத் தொடரில் கேன்சரைப் பற்றிய பொதுவான உண்மைகள் மற்றும் வதந்திகளைப்பற்றி பார்ப்போம். இந்தநோயைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவியாய் இருக்குமென்று நம்புகிறேன். ஏன் புற்றுநோயின் தாக்கம் இப்போது அதிகம்மென்பதை இந்தப் பதிவின் கடைசியில் பார்ப்போம். 

புற்றுநோயைப் பற்றி பார்ப்பதற்கு முன் இதன் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். புற்றுநோய் நிச்சயம் தற்கால நோயல்ல. 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்தியர்கள் தங்கள் வரலாற்றின் பெரும்பகுதியை கற்களிலும் (hieroglyphics), ஓலை போன்றவொன்றிலும் (papyrus) பதிவு செய்தனர். புற்றுநோயைப் பற்றிய முதல் பதிவு 1600 BC-ல் (~3600 ஆண்டுக்கு முன்) பழமைவாய்ந்த ஓலையொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதில் மார்பகப்புற்றுநோயென்றால் என்னவென்றும் (Breast cancer) அதற்க்கு எந்த சிகிச்சையும் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதே காலத்தில் கிடைத்த இன்னொரு ஓலையில் கருப்பை புற்றுநோயையும் (Ovarian cancer) அதன் சிகிச்சை முறை பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் புற்றுநோயை அறிந்திருந்தனர். சித்த மருத்துவத்தில் 'புற்று' என்று புற்றுநோய் அறியப்படுகிறது (கறையான் புற்றைபோல வளர்ந்துகொண்டேயிருப்பதால் அந்தப்பெயர்). 

மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் Hippocrates (460-370 B.C) என்னும் கிரேக்க (Greek) மருத்துவர். புற்றுநோய்க்கட்டி மீது இரத்த நாளங்கள் பதிந்திருப்பது ஒரு நண்டுபோலிருப்பதை வைத்து Hippocrates புற்றுநோயை கார்கினோஸ் (Karkinos) என பெயரிட்டார். கிரேக்கத்தில் karkinos என்றால் 'நண்டு' என்று பொருள்.  




கேன்சரைப்பற்றி Hippocrates-ன் பின்வரும் குறிப்புகள் மிக முக்கியமானவை:



"ஒவ்வொரு புற்றுநோயும் அது பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் நிற்காமல் உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது அதனால்  புற்றுநோயை ஆரம்ப கட்டங்களில் மட்டுமே குணப்படுத்த முடியும்" - Hippocrates (460-370 BC)


"புற்றுநோய் கடினமான கட்டியாயிருப்பதைவிட மென்மையான  கட்டியாயிருந்தால் நல்லது (Soft cancers are good but hard ones are bad)" - Hippocrates (460-370 BC)

- இன்றுவரை இவையிரண்டும் உண்மை.

கிரேக்க (Greek) மருத்துவ போதனைகள் ரோமர்களால் (Romans) தொடரப்பட்டன. ரோம மருத்துவர் Galen (131-200 AD), அவர்காலத்திலும் அதற்கு முன்னும் அறியப்பட்ட அனைத்து மருத்துவத் தகவல்களையும், பல ஆய்வுகளையும் தொகுத்திருந்தார். புற்றுநோய் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக்கூடும் என்றும் எடுத்துரைத்தார். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் (Breast cancer) பரவலாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.  

அறுவை சிகிச்சை மட்டுமே புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய வாய்ப்பென்றும், அதுவும் நோயின் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே சாத்தியமென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


Credit: © Royal College of Radiologists

அக்கால எகிப்தியர்களின் அரசவம்சத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் தாங்கள் இறவாமலிருக்க பாதுகாக்கப்பட்ட mummy- க்களிலிருந்து நோய்களின் மதிப்புமிக்க தகவல்கல் கிடைக்கப்பெற்றன. மேலே இருக்கும் மண்டையோடு 1200 - 1100 BC காலத்திற்குட்பட்டது. இது நிச்சயமாக மூளையின் மேலிருக்கும் மெல்லிய தோலில் ஏற்பட்ட புற்றாக (meningioma) இருந்திருக்கவேண்டும்.

பிறகு, சுமார் 1500 வருடங்களுக்கு புற்றுநோயைப்பற்றிய தகவல்களில் பெரிய மாற்றமேதுமில்லாமல் இருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் வைரஸ்கள் புற்றுநோயின் காரணியென நம்பப்பட்டது. சில புற்றுநோய்கள் பரம்பரை நோயாகயிருக்கலாமென்றும் கருதப்பட்டது. 

19-ஆம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை முறைகள் நல்ல வளர்ச்சிபெற்றன. புற்றுநோய்க்கான முதல் மருத்துவமனை இங்கிலாந்தில் துவங்கப்பட்டது. கதிரியக்க நோயறிதல் மற்றும் கதிரியக்க சிகிச்சை (radiodiagnosis and radiotherapy) கண்டறியப்பட்டது. 

20-ஆம் நூற்றாண்டில் மருத்துவத் துறை மிகப்பெரிய வளர்ச்சிகண்டது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட மயக்க மருந்துகள் (anaesthetic techniques), நோய் கண்டறியும் நுட்பங்கள் (diagnostic methods), இலக்கு சிகிச்சை (targeted therapy), கீமோதெரபி (chemotheraphy) ஆகியவையுமடங்கும். 21-ம் நூற்றாண்டில் immunotheraphy, CAR T-cell therapy வளர்ச்சிகண்டது. மருத்துவத்தில் முன்பைவிட பலமடங்கு முன்னேற்றமடைந்துள்ளோம். 

 இதுவரை மனிதயினம் வாழ்ந்த காலங்களில் இப்போதுதான் மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை முறைகளைப் பெற்றுள்ளோம் (state of art facilities available globally), மிகமுக்கியமான நோய்களை அழித்துள்ளோம். ஆனால் இன்னும் மருத்துவத்தில் இன்னும் மிகநீண்ட தூரம் செல்லவேண்டும், ஏனென்றால் இன்னமும் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கமுடியவில்லை. இன்னமும் பல இடங்களில் Hippocrates மற்றும் Galen-னின் கணிப்பே சரியாகயிருக்கின்றது, இது மிகப்பெரிய துரதிஷ்டம்!

ஏன் புற்றுநோய் இப்போது பரவலாகயிருக்கிறது:



1. நீளாயுள் (Increased life expectancy):


ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் ஒருமனிதனின் சராசரி ஆயுள் 69 ஆண்டுகள். ஆனால் 1947-ல் அது வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே, இது பண்டைய எகிப்திய காலத்தைவிட குறைவு (39 ஆண்டுகள்). பல நோய்களின் காரணமாக முன்னர் மக்கள் இறந்தனர் (சிறுநீரக நோய்கள், பிளேக், காலரா, மலேரியா, காசநோய் மற்றும் பல). இவற்றில் அநேகமானவை தற்போது குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தாண்டி மனிதர்கள் இறக்க இன்னும் பல காரணங்களிருந்தன உதாரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு இப்போது கணிசமான மக்கள்தொகை ஊட்டச்சத்து மிக்க உணவை பெறமுடிகிறது. தற்போதைய கால கட்டத்தில் மனிதன் இரண்டு மிகப்பெரிய சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது. 1. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் 2. புற்றுநோய். 

இவை இரண்டும் வயது சம்பந்தப்பட்ட நோய்களாகும். பெரும்பாலான இருதய நோய்கள் வயதான மக்களால் தவிர்க்க முடியாதவை. எனவே மனிதன் நீண்ட காலம் வாழ்ந்தால் இந்த நோய்களை சந்தித்தேயாகவேண்டும்.

2. மருத்துவ பரிசோதனை (Clinical diagnosis)

தற்போதைய சிறந்த மருத்துவ பரிசோதனைகள் புற்றுநோயை துல்லியமாக கண்டறிய உதவுகிறது. உதாரணமாக இமேஜிங் நுட்பங்கள் (imaging technologies - X-ray, PET-CT scans), எண்டோஸ்கோபிக் நுட்பங்கள் (endoscopic examinations), உயிர்த் திசு ஆய்வு (biopsy), செல்களை பகுத்துப்பார்க்கும் முறை (histological and cytological investigations) புற்றுநோயை துல்லியமாக கண்டறிய உதவுகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு பொதுவான நுரையீரல் நோய் - காசநோய். ஆனால், காசநோய் கண்டுபிடிக்கப்பட்ட பலர்  உண்மையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

3. புற்றுநோயூக்கி (Carcinogen):

கண்டிப்பாக புற்றுநோய் அதிகரித்ததன் ஒரு முக்கியக்காரணம் புற்றுநோயூக்கிகளை (Carcinogen) வலுக்கட்டாயமாகவோ, தற்செயலாகவோ எதிர்ப்படநேர்வது. ஏடுத்துக்கட்டாக புகையிலை (tobacco), கல்நார் (asbestos), கதிர்வீச்சு (radiation). இவையனைத்தும் நிச்சயம் நாகரிக மனிதனின் விளைவுகள்தான். புற்றுநோயூக்கியாகப் பரிந்துரைக்கப்பட்ட பொருட்களின் மிகப்பெரியப்பட்டியல் உள்ளது, அவை பல முக்கிய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை. நவீன நாகரிகம் பல புற்றுநோயூக்கிகளை அதிகரித்திருக்கிறது, இதனால் புற்றுநோயும் அதிகரித்துள்ளது.

4. வாழ்வு முறை (Life style):

உணவுகளில் சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை (diets high in red and processed meats) அதிகம் சேர்த்துக்கொள்ளுதல், அதிக எடை மற்றும் உடல் பருமனாயிருத்தல் (overweight and obesity), மது அருந்துதல் (alcohol consumption), பாப்பிலோமாவைரஸ் தொற்று (HPV infection), குறைந்தகாலம் தாய்ப்பால் கொடுப்பது (women breastfeed less) போன்றவற்றாலும் கணிசமாக  புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது.

Dr. T.K.B. காந்தி, PhD
(தொடரும்)

No comments:

Post a Comment