Wednesday, January 21, 2009

வெண் விதவை



புத்தாண்டை நெருங்கிய அன்றையதினம் ஒரு சராசரி தினத்திலிருந்து சற்று விலகி ஏதோ எதிர்ப்பார்ப்புடனேயே இருந்தது. வெயில், முந்தைய நாளின் வாசலிலே நின்றுகொண்டிருந்து காலை எட்டு மணி வரை. ஆம்ஸ்டர்டாமில் அந்த பிரபலமான Grasshopper coffee shop-ல் புகைகளுக்கு நடுவே நுழைந்து reception-ல் நின்றுகொண்டிருந்தவளிடம் நண்பன் ஏதோ கேட்க அவள் white widowவென்று ஒரு பாலிதீன் கவரை அவனிடம் கொடுத்தாள். 

முதல்முறை என்பதாலும் அநேகயிடத்தில் தடைசெய்யப்பட்டதாலும் பற்றவைத்ததும் முதல் இழு கொஞ்சம் சுவாரஸ்யமாயிருந்தது. பிறகு, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது............... லேசாய் காது அடைபட்டுக்கொண்டே இருந்தது. அணைக்கு கிழே நிறுத்தப்பட்டதுமாதிரி ஒரு பிரமாண்ட 'ஓ' சத்தமும், ஓர் ராட்சத அதிர்வும் பலமாகிக்கொண்டே போனது, பயமும் இவற்றின் இணையாக. லேசான வியர்வையினப்பறம் பதட்டம் குறைந்துவிட்டது. உடம்பின் geometric நடுவிலிருந்து உணர்ச்சி மறைய ஆரம்பித்து, தொடர்ந்து, அதன்பின் உடலின் எல்லைகளனைத்தும் மறைந்தபின் மறைதல் முற்றுபெற்றது. கொஞ்சநேரத்தில் நிசப்தம் நிலவி எல்லாம் நிதானமானது. நொடிகளையும் பல்கூறுகளாக பகுக்கப்பெற்று ஒவ்வொன்றிலும் நிலைத்து நின்ற அமைதி. கண்ணை முடி உயரமானவொன்றின் விளிம்பில் நிற்கையில் வெளியேபரவியிருந்த காற்றின் கனமேயிருந்தது உடலும், மனமும். இருந்தும் இல்லாதது போலவொரு உணர்தல்.

Hotel California-வின் வரிகள் முதல் முறையாய் புரிய ஆரம்பித்தது. Bob Marleyயின் இசை மேல் இனம் புரியாதவொரு ஈர்ப்பு. ஒத்ததிர்வில் புரிந்துகொள்ளக் கூடியதாய் இருந்திருக்கலாம் அவர்களும், அவர்களின் இசையும். அவர்களின் கிட்டார் நாணின் அதிர்வில் ஒரு கேள்விபிறந்து அதன் நீட்சியாய் இன்னோன்றேன்று பல கேள்விகள் மொய்த்துக் கொண்டேயிருந்தது. அத்தனை கேள்விகளும் ஒரே புள்ளியில் குவிந்து ஏதோ இருட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாய் உணரும் நேரத்தில், ஏதோவொரு நரம்புகளில் உணர்கிறேன் எலும்பைத்தாண்டியுணர்த்தும் குளிரை. அத்தனை அமைதியாய் ஆம்ஸ்டெல் ஆற்றினுள்ளே மூழ்கிக்கொண்டேயிருக்கிறது தனிச்சையாய் என்னுடல். ஜன்ம ராசியை சனிப்பார்ப்பதால் தீர்காயுள் உறுதியென்று எப்பொழுதோ சொன்ன ஜோதிடனின் குரல் மட்டும் ஒருமையாய் கேட்டுக்...