Thursday, August 23, 2018

கேன்சர் (பகுதி 4)


புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகளில் மொபைல் போன், வைஃபை,  உணவு மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றில் மொபைல் போன்களைப் பற்றி  முதலில் பார்ப்போம்.

புற்றுநோயானது "மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்" என்று மீண்டும் மீண்டும் நம்பவைக்கப்படுகிறோம். நம் நவீன வாழ்க்கைமுறைதான் புற்றுநோயின்  காரணமாக நம்புவது முட்டாள்தனம். நவீன வாழ்க்கைமுறையில் மிகவும் அத்தியாவசியமான ஒரு சாதனம் மொபைல் போன்கள் அல்லது செல்போன்கள்.

செல்போன் பயன்பாட்டின் அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக மனிதர்களுக்கு (செல்போனிலிருந்து) ஏற்படும் கதிர்வீச்சின் தாக்கம்/அபாயங்களைப்பற்றி உலகெங்கிலுமுள்ள சுகாதார நிறுவனங்கள் ஆராயத்தொடங்கின.

நாம் நோக்கியாவில் பாம்பு விளையாடிய நாட்களிலிருந்தே பொதுமக்கள் மொபைல் போன்களைப் புற்றுநோய்க்கான காரணியாக சந்தேகிக்க ஆரம்பித்தனர். கடந்த 15-20 ஆண்டுகளில், மிகச்சொற்பமாக இருந்த மொபைல் போன்கள் இன்று கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கும் சாதனமாகிவிட்டது. பொதுவாக, மொபைல் போன்கள் மூளை புற்றுநோயை (glioma) உண்டாக்குவதாக நம்பப்படுகிறது! இதை சரிபார்க்க அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute, NCI) ஒரு ஆய்வை நடத்தியது. அதில், 1992 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த மூளை புற்றுநோயின் தாக்கத்தை கணக்கிட்டது. அதில் ஆய்விற்குட்படுத்தப்பட்ட 16 ஆண்டுகளில் மொத்தமாக மூளை புற்றுநோயின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை (அதிகரிக்கவில்லை). குறிப்பாக, இந்த காலகட்டத்தில்தான் செல்போன் பயன்பாடு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை அதிகரித்த காலம். மொபைல் போன்கள் புற்றுநோயை உருவாக்கக்காரணமாக இருந்தால், மூளை புற்றுநோயின் எண்ணிக்கை கணிசமான உயர்ந்திருக்க்கவேண்டும், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அதனால், செல்போனுக்கும் மூளை புற்றுநோயிக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்பற்றி மேலும் அறிய புற்றுநோய் பற்றிய ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer, IARC) 13 நாடுகளில், 30 - 59 வயது மக்களிடம், 5 - 10 ஆண்டு பயன்பாட்டை வைத்து நடத்தப்பட்ட இன்டர்ஃபோன் ஆய்வில் (INTERPHONE study) தெரிவிப்பது என்னவென்றால் செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோய்க்கும் (glioma or meningioma) எந்த தொடர்பும் இல்லை எனவும் (முக்கியமாக) அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் (glioma) வருவதற்கான ஆபத்து மிதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இவர்களின்படி ஒரு சராசரி பயனர் ஒரு மாதத்திற்கு இரண்டரை மணிநேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர் (அதாவது வாரத்திற்கு சுமாராக அரைமணிநேரம்) மற்றும் அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர் பத்து ஆண்டுகளாக ஒருநாளைக்கு அரைமணிநேரம் முதல் ஐந்து மணிநேரம் வரை செல்போன் பயன்படுத்துபவர். அதனால் IARC செல்போன்களால் உருவாக்கும் நுண்ணலை கதிர்வீச்சை (microwave radiation) சாத்தியமான புற்றுநோயுக்கியாக (possible human carcinogen) அறிவித்துள்ளது. அதாவது, அதிகமாக செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோயிற்க்கும் ஒரு அனுமான இணைப்பு இருக்கலாம் என்று மட்டுமே பொருள் கொள்ளவேண்டும், மாறாக செல்போன்கள் புற்றுநோயை உருவாக்குமென்று உறுதிப்படுத்த முடியாதென்கின்றனர்.

இதைப்பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துகொள்வதற்காக IARC 2011-ல் Cohort Study of Mobile Phone Use and Health (COSMOS) என்ற ஆய்வை தொடங்கியது, அதில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 2,90,000 செல்போன் பயனர்களை 20 முதல் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் முடிவு வருவதற்கு இன்னும் சிலகாலமாகும். அதுவரை இதைப்பற்றிய கட்டுக்கதைகளே மேலோங்கிநிற்கும். 

பொதுவாக, செல்போனில் நீண்டநேரம் பேசவேண்டியிருந்தால் ஹெட்ஃபோன்கள் (headphones) பயன்படுத்துவது நல்லது. ஹெட்ஃபோன்கள் radiofrequency ஆற்றல் வெளிப்பாட்டை தலைக்கு நேரடியாக கடத்தாமல் குறைக்கின்றன (ஏன்னென்றால் செல்போனின் ஆண்டெனா தலையில் நேரடியாக படுவதில்லை).

அடிப்படையில், நமது செல்களிளுள்ள டி.என்.ஏ (D.N.A) சேதமடைவதினால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது. அயனியாக்கம் கதிர்வீச்சு (Ionizing radiation) அணுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்களை விடுவிப்பதற்கு போதுமான ஆற்றலைக் கொண்டிருக்கும்.  X-கதிர்கள் (X-ray), காமா கதிர்கள் (Gamma rays) மற்றும் அதிகமான புறஊதா கதிர்கள் (higher ultraviolet rays) போன்றவை Ionizing radiation - இவை சக்திவாய்ந்த ஆற்றலுள்ளது. ஆனால், மொபைல் போன்கள் மிகச் சிறிய அளவே ஆற்றல் கொண்டவை. டி.என்.ஏ-வை உடைப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு மொபைல் போன்களின் கதிர்வீச்சை விட மிக அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது.

- Dr. T.K.B. காந்தி, PhD

(தொடரும்)

---

No comments:

Post a Comment