Wednesday, June 18, 2025

Will bend my lock to match your key...

 

Photo Courtesy: https://www.youtube.com/@barelyjazzmusic

இன்று வரையிலான 
என் வாழ்க்கை 
முழு நிறைவானது -- 
’NRI பொழுதுகள்’ கவிதையில்
நான் யாசித்தவை போலவே.

இந்த மழை நாட்களில்,
நிறைந்த மனதின் ஊடே
நெற்றி சாய்கையில்,
ஒற்றைநாண் கிரீச்சிட்டு,
தொடர்பிழந்த,
எனைக்கடந்த 
என் தேவதைகள் 
ஒவ்வொருவராய்
நினைவில் பிறக்கின்றீர்!

இதை எழுதும்
மெல்லிய Jazz நேரத்தில்,
மனம் மெதுவாய் 
அழுகும் மெளனத்தில்,
நான் யாசிப்பது
ஒன்றுதான்!

உங்களுடன்
வெறும் நினைவுகளாயில்லாமல்,
வெறும் வரிகளில் அடைக்காமல்,
ஒரு முழு வாழ்க்கை —
ஒவ்வொருவருடனும்
வாழ்ந்து தீர்க்கவேண்டும்!

ஒரு சூரியன் முழுவதும்
பொழிந்த பிறகு
மண்ணுக்குள் தேங்கும்
வெப்பம் போலவே
உங்கள் ஒவ்வொருவரின் பொழிவு
என் ஒவ்வொரு செல்களிலும்
நிறையவேண்டும்…
நிறைந்து பெருகவேண்டும்…
பெருகி வழியவேண்டும்…
வழிந்துத தீர்க்கவேண்டும்!
ஒவ்வொருவராய்!

இந்த என் வாழ்கை 
என் மனைவிக்கானது!
அது போதுமான பாக்கியம்!
இது 
எத்தனை யுகங்கள் 
நான் கிடந்த தவமென 
அறியேன்!

என்றாவதொருநாள்
இந்த பெருவானத்து 
நட்சத்திரமாவேன்...

உங்கள் நினைவை உரமூட்டி
தகித்தெறிந்து
எரிநட்சத்திரமாய்
மீண்டு வருவேன்.

அதுவரை 
தயவுசெய்து 
எனக்காக
காத்திருங்கள்!

---

No comments:

Post a Comment