Saturday, August 30, 2025

பெருந்துணை

AI generated image
ஏதேதோ சாயல் ஏற்று
திரிந்த என் காதல்
ஒரு சுக்கில பட்ச ஏப்ரல் நாளில்
உன்னுள் நிறைந்து
நிச்சலனமாய்
இன்று வரை
உறங்கிக் கொண்டிருக்கிறது!

விழித்து வெளியேற 
எல்லைகளற்ற உன்னுள்,
திசைகளற்று
பயணித்துக் கொண்டேயிருக்கும்!

என்றாவதொரு நாள்
அறிவழிந்து
உயிர்த்தெழுந்து
நடைபிறழ்ந்து
வெளியேறக்கூடும்!

உன் கதவுகளை மூடாமல்
காத்திரு!
என் காதலை மன்னித்து,
கண்கள் மூடி
அந்தரங்க முத்தமிடு!

பெய்யென பெய்யும் 
ஒரு மழையிரவில்
உன் உள்ளங்கை
மென்சூட்டின் 
வெப்பம் தேடி 
உன்னருகே 
வீழ்ந்துகிடக்கும்!

நீ கோதும் விரல்களிடுக்கில் 
நுழைந்து 
மீண்டும் 
கடல் காணும் 
நதி போல
உன்னுள் மீண்டும் 
கரையக் காத்திருக்கும்! 


-- அன்பு மனைவிக்கு --


Wednesday, June 18, 2025

Will bend my lock to match your key...

 

Photo Courtesy: https://www.youtube.com/@barelyjazzmusic

இன்று வரையிலான 
என் வாழ்க்கை 
முழு நிறைவானது -- 
’NRI பொழுதுகள்’ கவிதையில்
நான் யாசித்தவை போலவே.

இந்த மழை நாட்களில்,
நிறைந்த மனதின் ஊடே
நெற்றி சாய்கையில்,
ஒற்றைநாண் கிரீச்சிட்டு,
தொடர்பிழந்த,
எனைக்கடந்த 
என் தேவதைகள் 
ஒவ்வொருவராய்
நினைவில் பிறக்கின்றீர்!

இதை எழுதும்
மெல்லிய Jazz நேரத்தில்,
மனம் மெதுவாய் 
அழுகும் மெளனத்தில்,
நான் யாசிப்பது
ஒன்றுதான்!

உங்களுடன்
வெறும் நினைவுகளாயில்லாமல்,
வெறும் வரிகளில் அடைக்காமல்,
ஒரு முழு வாழ்க்கை —
ஒவ்வொருவருடனும்
வாழ்ந்து தீர்க்கவேண்டும்!

ஒரு சூரியன் முழுவதும்
பொழிந்த பிறகு
மண்ணுக்குள் தேங்கும்
வெப்பம் போலவே
உங்கள் ஒவ்வொருவரின் பொழிவு
என் ஒவ்வொரு செல்களிலும்
நிறையவேண்டும்…
நிறைந்து பெருகவேண்டும்…
பெருகி வழியவேண்டும்…
வழிந்துத தீர்க்கவேண்டும்!
ஒவ்வொருவராய்!

இந்த என் வாழ்கை 
என் மனைவிக்கானது!
அது போதுமான பாக்கியம்!
இது 
எத்தனை யுகங்கள் 
நான் கிடந்த தவமென 
அறியேன்!

என்றாவதொருநாள்
இந்த பெருவானத்து 
நட்சத்திரமாவேன்...

உங்கள் நினைவை உரமூட்டி
தகித்தெறிந்து
எரிநட்சத்திரமாய்
மீண்டு வருவேன்.

அதுவரை 
தயவுசெய்து 
எனக்காக
காத்திருங்கள்!

---