Thursday, February 18, 2016

The Font

I dug into my heart 
deeper 
to see who is inside, 
the more I dug, 
the more I lost me. 
- Rumi


இத்தனை நாளில் அன்றுதான் தெரிந்தது!
என் மகிழம்பூச் சட்டையை
ஏதோவொரு
கவிதையில் 
முன்னமே யாரோ 
அணிந்திருக்கிறார்கள்!

அந்த புள்ளியிலிருந்து
தொடங்கி
எனை மொய்த்து கொண்டேயிருக்கிறது
நான் சிறுகச் சேர்த்த
என் போலிகள்!

பிழை திருத்துபவனின்
அவசரத்தில்
அன்றிலிருந்து
தேடிக் கொண்டேயிருக்கிறேன்.
என்னுடைய நான்!
ஏதாவதொரு நான்!

தலை வகிடு,
எழுத்துக்கள்,
வார்த்தைகள்,
பிடித்தவைகள்,
ரசனைகள்,
அனைத்திலும்
எவரோவொருவரின் பிம்பம்
விழுந்து
சில்லுகளாய் சிதறிக்கொண்டேயிருக்கிறேன்
இன்றுவரை!

வெறுமை படர்ந்தயிரவில்
நிலைகொள்ளாமல்
குமட்டி
எல்லோரையும் வெளியேற்றி
வேறுவொரு கூட்டத்தை
மட்டுமே
நிரப்பியிருக்கிறேன்!

ஜெயித்ததைத் தோற்கும்
அதே சூதாடி தான்!
இன்றுவரை...

சட்டையின்
மகிழம்பூக்கள் 
ஒவ்வொரு இதழாய்
உதிர்ந்து
ஒருநாள் நான்
நிர்வாணமடையக்கூடும்!

ஆனால்,
முன் எப்பொழுதாவது
நான் உங்களிடம் பழகியிருந்தால்,
இந்த கவிதையை
உங்களைப் போலவும்
வாசித்திருக்கக் கூடும்!

2 comments:

  1. பிரதீப்Feb 22, 2016, 7:34:00 PM

    இந்த கவிதையை
    உங்களைப் போலவும்
    வாசித்திருக்கக் கூடும்!
    -இந்தவரி அருமை.

    வெறுமை படர்ந்தயிரவில்
    நிலைகொள்ளாமல்
    குமட்டி
    எல்லோரையும் வெளியேற்றி
    வேறுவொரு கூட்டத்தை
    மட்டுமே
    நிரப்பியிருக்கிறேன்!

    சூப்பரப்பு!

    ReplyDelete
  2. நன்றி பிரதீப்,

    I dug into my heart
    deeper
    to see who is inside,
    the more I dug,
    the more I lost me.

    - Rumi

    ReplyDelete