Tuesday, September 08, 2009

சொல்ல மறந்தவை


நீ வீசியெறிந்த மெளனத்தில்
அலை தளும்பி நிற்க்கிறதென் குளம்
கரையொதுங்கும் சில குமிழிகளுக்கு மட்டும்
சொல்லிவைப்பேன்
உன்னிடம் சொல்ல மறந்தவைகளை.
ஆகாயம் வீசும்
பேய்க்காற்றில்
அவை உடைவதற்க்குள்
ஒரே ஒரு முறையேனும்
என் குளத்தில்
கால் நனைத்து செல்.



Photo courtesy: free-background-wallpaper.com
-

Sunday, September 06, 2009

தியாகத்தின் அறிவியல்



சார்ல்ஸ் டார்வின்
(1809-1882) தன் The Origin of Species-ல் 'தக்கன பிழைக்கும்' அதாவது உயிரினங்கள் வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொள்கின்றன, அதில் தகுதியானவையே வாழும் என அறிவித்தார். இந்த கட்டுரை அதைப்பற்றியல்ல. அவர் விவரிக்கத் தடுமாறிய தியாகத்தை (sacrifice)-ப் பற்றியது. அதாவது, தக்கன பிழைக்குமென்றால் ஒரு உயிர் மற்றோன்றிற்க்கு ஏன் உதவவேண்டும்?, ஒத்துழைக்கவேண்டும்? அல்லது தியாகம் செய்ய வேண்டும்? டார்வினால் விவரிக்க மிகவும் தடிமாறிய விசயம்தான் இந்த ’தியாகம்.’


வேலைகாரத் தேனி அதன் கூட்டத்தின் நன்மைக்காக கடினமாக உழைக்கக்கூடியது ஆனால் அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, பிறகேன் யாருக்காகவோ இப்படி உழைக்க வேண்டும்? இவ்வகை உயிரிகளை (social organisms) தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையெனவும் தன் கோட்பாட்டால் இவைகளை விவரிக்க முடியாதெனவும் டார்வின் தன் The Origin of Species-ல் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட தியாகங்களால் தான் பரிணாமத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கின்றது. அந்த தேனியைப் போலவே, ஒரு வகை வேலைகார எறும்பாலும் இனப்பெருக்கமுடியாது ஆனால் அது அதன் ராணியின் குழந்தைகளை பேணி வளர்க்கும். இந்த மூன்று பில்லியன் வருடங்களில் ஒரு செல் உயிரியிலிருந்து ஆறு அறிவு மனிதனாக மாற இயற்கைத் தேர்வும் (Natural selection), மரபணுப்பிறழ்வும் (Mutation) மட்டுமே காரணமாக இருக்க முடியாதெனவும் இதுபோன்ற தியாகங்களும் மிக முக்கியமென சொல்கிறார் மார்டின் நெளக் (Harvard University, USA). நீங்கள் Discovery, NGC, AP-ல் பார்க்கும் உயிரைப் பணையம் வைத்து தன் குட்டியைக் காப்பாற்றும் மானும், சின்னம்மையில் நீங்கள் படுத்தால் மாரியம்மனுக்கு விரதமிருக்கும் உங்கள் அம்மாவும் தியாக உருவாக மாறி உங்களை காப்பாற்ற முயலும் குடும்ப பந்தங்களாலும், பிறர்க்காக விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலமாகவும் ஒரு இனத்தின் வளர்ச்சி ஓங்கும்மென்றும் இது போன்ற குடும்பங்களை Natural selection விரும்புமென்றும் டார்வின் சொல்லியிருக்கிறார்.


டார்வின் கொடுத்த இந்த துப்பை வைத்துக்கொண்டு வில்லியம் ஹேமில்டன் (1936-2000) என்னும் இங்கிலாந்தைச் சார்ந்த பரிணாம ஆராய்ச்சியாளர் ’தியாக’ங்களை Inclusive fitness எனும் சமன்பாட்டில் கொண்டுவந்து டார்வினின் எதிர்கொண்ட பிரச்சினைக்கு விடை கொடுத்தார். அதாவது, உங்கள் உறவுக்காரர்கள் உங்களையொத்த குணமுள்ளவர்கள் (எதோ ஒரு வகையிலாவது – நல்லதோ/கெட்டதோ) அந்த குணமே உங்கள் குடும்பத்தில் மேலோங்கியிருக்கும். அதனால் ஒரு குடும்பத்தில் ’தியாகி’கள் சில இருந்து தானழிந்து தன் குடும்பத்தை வாழையடி வாழையாக பெருகுவர். குடும்ப உறுப்பினர்கள் பெருகுவார்கள், அந்த குடும்பம் பெருகுகிறது. இந்த குடும்பம்போல் தான் ஒவ்வொரு உயிரிக்கும். எடுத்துக்காட்டிற்க்கு, ஒரு வகையான அணில் தன்னை இரையாக்கவரும் விலங்கைப் பார்த்ததும் கத்தி தன் சக அணில்களைக் எச்சரிக்கும், அதன் சப்தத்தில் அந்த விலங்கிடம் தான் சிக்கிக்கொள்ளும் – இந்த ’தியாக’ அணில் இரையாகக்கூடும் ஆனால் மற்ற அணில்கள் காப்பாற்றப்படும், இப்படி சில தியாகிகள் இறந்தாலும் அந்த குழுமத்திற்க்கு கடைசியில் நன்மையே. மாறாக, அந்த அணில் தான் மட்டும் தப்பி இருந்தால் அந்த குழு சில அணில்களை இழந்திருக்கும். இப்படி அந்த குழு எண்ணிக்கை குறைந்துகொண்டே போயிருக்கும். ஒரு உயிரின்/குழுவின்/குடும்பத்தின் பரிணாம வெற்றி அதன் நகல்களின் எண்ணிக்கையில்தான் உள்ளது அதனால் உதவி/தியாகத்தினால் ஒரு உயிரின்/குழுவின்/குடும்பத்திற்கோ எந்த கெடுதலும் எற்படாது மாறாக நன்மையே ஏற்படும். 


மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒரு குழுவிற்கோ, இனத்திற்கோ, உயிரிற்கோ பொது. இப்படியான sacrifice, cooperation, altruism போன்ற குணங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிரி தன் பரிணாம வெற்றிக்காக அந்தந்த உயிரினங்களில் இயற்க்கை ஏற்ப்படுத்தியுள்ளது என்பதைத் தாண்டி நம்மால் அவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.


டிஸ்கி:
நீ கவிதையெழுதினா யாருக்கும் ஒரு பைசா பிரயோஜனமில்ல, உருப்படியா எதுனா எழுதுனா தேவலாமென்று சொன்ன நண்பர்களுக்காக. இது உபயோகமானதான்னு தெரியல, ஆனா இந்த வருடம் டார்வினின் 200-வது பிறந்த வருடம் மற்றும் அவர் எழுதிய The Origin of Species-ன் 150-வது ஆண்டு விழாங்கறதுனால இது.


References:
1. Darwin, C. R. 1859. On the origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life. London.
2. Science (2009) Vol. 325. no. 5945, pp. 1196 – 1199.
3. Dawkins, R. 1976. The Selfish Gene. Oxford. London
4. http://en.wikipedia.org/wiki/Inclusive_fitness

Photo courtesy: sciencemag.org

-

Wednesday, September 02, 2009

சிலுவை

என் போலவே
சிதறியிருந்த கூட்டத்தில்
அவள்மட்டும்
எனை
உருக்கிடும் ரசாயனங்களை 
செய்து கொண்டிருந்தாள்.
கரைந்துகொண்டிருந்தேன்.
கடற்கரையில்
நாற்பது டிகிரி வடக்கில்
தனியாய்
அமர்ந்த அவளுக்கு
கண்மூடி ஜீவரகசிய
முத்தமிட்டேன்.
இதழ் பிரிக்கையில்
நூல் அறுந்து
ஒட்டிகொண்ட
எச்சில் குமிழிகளில்
தொடங்கி 
கொட்டிய நீரைப்போல்
படர்ந்து
நிரம்பிவழிந்து கொண்டிருந்தாள்.
சிவந்த கண்களுடன்
மொழியின் வசமற்று
வாய் பிளந்து...
கண் திறக்கும் 
பொழுதிற்க்குள்
என் காலடியில்
எனக்கான சிலுவை
முளைத்துக்கொண்டிருந்தது...

Photo courtesy: tbclink.org
-