Monday, August 31, 2009

கலவை

இத்தனை நாட்களில்
எதுவாகவும்
ஆகமுடியவில்லை
நல்லவனாகவோ,
கெட்டவனாகவோ.
முழுதும்
உண்மையானவனாகவோ,
ஏமாற்றுபவனாகவோ.
எல்லோரிடமும்
காண்பிக்கவும்

ஒளித்து வைக்கவும்
அவரவர்களுக்கான
சிற்சிலவற்றை வைத்துள்ளேன்.
தனிமையில்
எதாவது ஒரு நேரத்தில்
இப்படி கலவையாகவோ
அல்லது
கலவையின் கலவையாகவோ
உணரும்போது
என் கண்ணாடி பிம்பங்களில்
அழுக்கின் கனம் மட்டும் கூடியிருக்கிறது.
இப்போது,
இந்த மூலையில்
வன்மையான கசப்புடன்
என்னை தேற்றிக்கொள்ள வைப்பவை
அவரவர்க்கான
அழுக்கு தோய்ந்த
அவரவர் பிம்பங்கள் மட்டுமே.


Fyodor Dostoyevsky (1821-1881)க்கு...

Picture courtesy: chuckypita.com

-

Wednesday, August 26, 2009

நாவினாற் சுட்ட வடு

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.

Photo courtesy Imapix.
-

Monday, August 24, 2009

நகரமுனி

சலித்த விட்டுக்கொடுத்தல்கள்,
புறக்கணிப்பு காயங்கள்,
கொல்லப்பட்ட காதல்,
மறுக்கப்பட்ட அன்பு,
நம்பிக்கையிழப்புகள்,
அவமானங்கள்,
அறுந்த உறவுகளென
தேர்ந்தெடுத்த கூரிய காயங்களை
எதிர்படும்
காலங்களில்
தடயங்களின்றி அழிக்கப்படவேண்டி

நாட்குறிப்பின் கிழிந்த இடங்களில்
தோண்டியிருக்கிறேன்
அதனதன் சவக்குழிகளை
அந்த அடர் இருட்டு பக்கங்களில்,
அவர்களுக்கான
அன்பு பூசிய
சொற்களுக்கு
அன்றன்று பூத்த
பாரிஜாத பூக்களையும்
சொருகியிருக்கிறேன்.
கனத்த பெருமழை வெறும்
பேரிரைச்சலுடன் பேய் மழையாகும்
செய்ய ஏதுமற்ற
நரைத்த நேரத்தில்
காய்ந்த
பாரிஜாத பூக்கள் தோய்ந்த
கிழித்தபோது ஒட்டிக்கொண்ட
ஒவ்வொரு பக்கங்களிலும்

படுத்துறங்கி
அவ் ஒவ்வொருவர் மீதும்
தனித்தனியாய்
பற்றில்லாமல்
காதலில்லாமல்
காழ்ப்பில்லாமல்
துக்கமில்லாமல்
வன்மமில்லாமல்
சிரிப்பில்லாமல்

விடியும் என் பொழுதுகள்.

Photo by Grafter.
-

Thursday, August 20, 2009

ஆதாம் பறித்த ஆப்பிள்

விழித்ததும்
பிரிந்ததுணரும் முன்னர்
உனை அழைக்க அழுத்தப்பட்டது தொடங்கி
முதல் ரிங்கிற்க்கு முந்தைய
மில்லி நொடியில்
எனை கவ்வ
காத்திருக்கிறது
ஒரு விலங்கு.
பேசும் முன் துண்டிக்கவைத்து
நிரம்பிவழியவிடும்
என் வெற்றிடங்களை.
விடுபடலோ
விடுதலையோ
சாத்தியமில்லை
அதனிடம்.
தெரிந்தே உன் எண்ணை
அழுத்தியவொரு
மதிய வேளையில்
பழகிய தாமதத்துடன் வந்து
உயிர் கத்தியழுது கதறியும்
என் தலை கவ்வி
துளித்துளியாய்
ரத்தம் சொட்ட
எல்லோருக்கும் பரிமாறும்
எல்லோரும் விரும்பியபடியே
நானில்லாத
அவர்களுக்கான என்னை.

-

Thursday, August 13, 2009

Cheers

Click on the photo for better resolution

Canon D400, EFS18-55mm@30, 1/500s, f5.6, ISO100.

-

Wednesday, August 12, 2009

Achilles’ heel

நீயற்ற வாழ்வின் சமன்பாடுகளின்
விடைகளுக்காக
நெடுநாள் காத்திராமல்
இறந்துவிட்ட அன்பின்
இறுதிச்சடங்கில்
துக்கமோ
விரக்தியோ
அல்லது
எதுவெனத்தெரியாதவொன்றால்
விம்மி பின்
உடைந்து அழுது
புதைத்து திரும்பும் வழியில்
உனை
தொலைக்கவும்,
சுமக்கவுமியலாமல்
கூனல் விழுந்து
உன் கைக்குள்
சுருங்கிக்கொள்கிறேன்.

உனையும் புதைத்துவிட்டு வருவதாய்
சொல்லிவந்த
என் வீட்டு
கண்ணாடியிடம்
என்ன சொல்ல?

-

Monday, August 10, 2009

முடிவற்றவை

சிக்குண்டு கிடக்குமொரு
வெண்மதியப் பொழுதில்
மூடிய ஜன்னலிடுக்கில்
பீறிட்டெழும் ஒளிக்கீற்றில்
மிதந்து செல்லும்
தூசியின் நோக்கமுடையது
என் மனமெனும் பிராணி.
வெளியேற வழியற்ற
ஒளிதாண்டிய
ஓரிடத்தில்
இந்த கவிதையை போலவே
முடிவற்றிருக்கும்...

-

Friday, August 07, 2009

தேவகணம்

  • உனை பிரியும் நேற்றே
    துவங்கிவிட்ட
    இன்றய அஸ்தமனத்தில்
    ஒருசில கண்ணீரே
    வைத்துள்ளேன்.
    எனக்காகயிருக்கட்டுமவை!

  • நுகர்ந்ததும்
    உணவில்லை
    என்றுணர்ந்த எதோவொரு
    ஐந்தறிவு போல்
    அலைக்கழிக்கப்படுகிறது
    என் வாழ்வு.
    நுகர்ந்த மூச்சில்
    ஆடிக்கொண்டிருக்கிறாய் நீ.
    யௌவன பொழுது
    நிறைந்த கோப்பைக்குள்
    வழிந்து நிறைகிற
    உன் நினைவுகள்
    தொலைந்த தேவகணத்தில்
    என்னுள்
    நுழைந்துகொள்ளும்
    அருகிலிருந்து எனைப்
    பார்த்துக்கொண்டிருக்கும்
    நான்.
-

Monday, August 03, 2009

காற்றில்லா நாள்

நாட்களின் வசீகரங்கள் தொலைந்த
கடும்நெடி வீசும்
ஒரு பழுப்புநிற மாலையில்
சிமென்ட் பெஞ்சில்
சந்திக்கநேர்ந்தது
விழிமணியில் ரத்தம் தோய்ந்த
என்றோ சந்தித்த அவளை.

சில சில்லுகளே மீதமிருந்த
அவள் இதயத்தை ஒட்டவைக்க
பிரியங்கள் பூசிய
என் மென்சொற்களுக்காக
இளஞ்சூட்டு கண்ணீரை
என் தோளில் கொட்டினாள்.
கொஞ்சம் விசும்பல்கள் தாண்டி
காற்றற்ற மரமாய்
அமைதியாயிருந்தவள்
மெல்லிய புன்னகையோடு
தேங்க்ஸ் சொல்லி மறைந்தாள்.


உறங்கையில்
அத்தனை கடுமையில்லாத
வெறும் காற்றில்லா நாளாகிப்போனது
அன்றைய தினம்
.

-