Wednesday, April 29, 2009

போராளியின் குறிப்பு


துர்நாறும் இந்த பொழுதில்
குறித்துக்கொள்கிறேன்
நீங்கள் எங்களுக்கு செய்தவற்றை
அதில் எழுதாத மைதீட்டிய பக்கங்களும்
குறிப்புகளே
.

வலிமை மட்டுமே பிரதானமான பின்
நீங்கள் இளைப்பாறும் கணத்தில்
எங்கள் பிள்ளைகளுக்கு
இந்த குறிப்புகளோடு கற்பிப்போம்
கொலை, வன்புணர்ச்சி
இன்னபிற வலியனவைகள்.

ஒரு மயிர்கூச்செறியும் கணத்தில்
பெருகும் எங்கள் வெளிச்சம்
வழிகாட்டுதலின்பாற்பட்டதல்ல.
அப்போது
வெற்றிக்கான எங்கள் குறியீடாய்
நீங்கள் எங்களுக்குச் செய்தவைகளோ
அல்லது
ரணப்பொழுதில் நாங்கள் யோசித்தவைகளோ...

அதுவரை
மாதானமென்பது
அகராதியில்
'' வரிசையில் வருமொரு
சொல் மட்டுமே.


Tuesday, April 28, 2009

இடுக்கண் கலைவதாம்...


எல்லாவற்றின் நடுவிலும்
அவனுக்கேற்பட்ட
விபத்தே அரைநாளாய்
கவனம் கலைத்தது.
அவசரமாய் கிளம்பி
பார்த்துவிட்டு வருகிறேன்.
வெள்ளை பேண்டேஜுடன் தடித்திருந்தது
அவன் வலக்கை,
நெற்றியில் நான்கு தையல்.
ஒன்றும் பெரியதாய் ஆகிவிடவில்லை!
கொஞ்சம் நிம்மதி.
உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு
வருந்திவிட்டு
ஒரு வாய் காப்பி குடித்து
டிஞ்சர் வாசத்துடன் வந்துவிட்டேன்.

இப்போதெல்லாம்
அடிக்கடி கனவு காட்டிக்கொண்டிருக்கிறது
அவனையும்,
கைமாத்தாய் வாங்கிய
முன்னுற்றி சொச்சம் ரூபாயையும்,
அவன் சொல்லவேண்டிய
ஒரு
தேங்க்ஸையும்.


-

Sunday, April 19, 2009

என்.ஆர்.ஐ பொழுதுகள்


சுப்ரபாத விழிப்பு
வளையமுடிந்த யோகா
ஃபில்டர் காபியுடன்
ஓரம் மடங்காத தினமணி
ஹமாம் சோப்புக்குளியல்
அரைமணி தியானம்
இட்லியுடன் தேங்காய் சட்னி
அலுவலக அவசரத்தில் அவள் முத்தம்
சிக்னல் விழாத சாலைகள்
சிதறவிரும்பாத வேலை
மாவடு ஊறிய தயிர்சாதம்
தாஜ்மஹால் டீயுடன்
புகைபிடிக்காத நண்பர்கள்
ஆறுமணி வீடு திரும்பல்
டீவி இல்லாத மாலை
ரசிக்கவொரு கவிதைப்புத்தகம்
என்னுடன் ரசிக்கும் அவள்
இருவரும் சமைத்த
எண்ணையில்லாத உணவு
லேசாய் குளிரும் மொட்டைமாடியிரவு
அவளின் முப்பத்தியேழு டிகிரி வெப்பம்
பேச சிலவிஷயங்கள்
சூடான பசும்பால்
சலிக்காத சிருங்காரம்
மார்மேல் அவள்கை
கனவில்லாத உறக்கம்.

மாறிக்கொண்டிருக்கும்
என் நிலங்களில்
டெட்லைன் வேலையின்பின்
பாஸ்தாவுடன் கொஞ்சம்
மெர்லாட் ஒயின் குடித்துத் திரும்பும் வழியில்
ஸ்டார் பக்ஸ் எஸ்ப்ரசோவிற்கப்பறம்
காலையில் க்ளையண்ட் மீட்டிங்கையும் சேர்த்து
இவையோசித்து
விழித்து கிடக்கிறேன்.