Wednesday, March 11, 2009

ஓசையடங்கிய மனம்

ஒரு நேர்கோட்டிலோ
எந்தவொரு புள்ளியிலுமோ
கிட்டத்தட்ட
வசப்படாத சூரியனின் முதல் கீற்றைப்போல
வட்டத்தின் அத்தனை மூலைகளிலும்
ஒருநொடிக்குள் தெறித்தோடி
மலையுச்சியில் குளிர் கூசி நிற்கும்
கோணிய என் மனதிற்கு
இப்போதைய
புருவமத்தியிலோ
பினியல் சுரப்பியிலோ
என்றோவொரு வயோதிக
மழைகாலங்களிளோ
பறைகிழித்துக்கேட்கும் அழுகுரலிலோ
அதைத்தாண்டி தூவப்படும்
ரோஜாவோ
செண்டுமல்லி வாசனையிலோ
அல்லது
தீயின் பிரதேசத்திலோ
எப்படியோ
என்றாவது சாத்தியப்படட்டும்
மூன்றாம் தந்திரத்தில்
திருமூலனருளிய
ஓசையடங்கிய மனம்.


Sunday, March 08, 2009

நீயெனும் மௌனம்



விட்டுச்சென்ற
மௌனங்களில்
சகிக்கமுடியாத
நீயாகிறாய்
நீ


கனத்த உன் மெளனங்களை
சுமந்து செல்கையில்
நீயில்லாத வலியும் சேர்த்து
வலிகள்
எல்லை கடந்தவொரு பொழுதில்
தவறி
என்
வீடுமுன் தேங்கி நிற்கும்
மழை நிரப்பிய
பழுப்புநீரில்
வீழ்கையில்
சிறுவயதுமுதல்
கனவில் வரைந்து
முடிக்கயியலாத
பறவையொன்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.
எதோவொரு
இதய அறையில்
என் தெய்வங்களிடம்
உனை மறக்காமலிருக்க வேண்டியது மட்டும்
அறும் கடைசி நூலாய்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது.